குவாரியை மூடக் கோரி 5-வது நாளாக போராட்டம்: கொரட்டகிரி மக்களுக்கு கிருஷ்ணகிரி எம்பி ஆதரவு

கல்குவாரியை மூட வலியுறுத்தி, தேன்கனிக்கோட்டை அருகே கிராம மக்கள் 5-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார்.
கல்குவாரியை மூட வலியுறுத்தி, தேன்கனிக்கோட்டை அருகே கிராம மக்கள் 5-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார்.
Updated on
2 min read

கிருஷ்ணகிரி: கல்குவாரியை மூட வலியுறுத்தி, தேன் கனிக்கோட்டை அருகே கிராம மக்கள் 5-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கிருஷ்ணகிரி எம்பி பங்கேற்றார். இதனிடையே, புல தணிக்கை செய்ய குழு அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தேன்கனிக்கோட்டை தாலுகா கொரட்டகிரி கிராமத்தின் அருகே உள்ள 6 கல்குவாரிகளை மூட வலியுறுத்தியும், இக்கிராமத்தின் வழியாக கனரக வாகனங்கள் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரியும் அக்கிராம மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறி ஊருக்கு வெளியில் கூடாரம் அமைத்து கடந்த 11-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

4-வது நாளான நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார் (காங்.) போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இரவு கூடாரத்தில் உறங்கிவிட்டு, நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: கடந்த 5 நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்துக்கு முன்னால் நிற்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இக்கிராம மக்கள் நல்ல சுற்றுச்சூழலுடன் வாழ வழி ஏற்படுத்தி மக்கள் குழந்தைகள் நிம்மதியாக வாழும் வரை நானும் அவர்களுடன் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் சமாதான கூட்டம் நேற்று நடந்தது.

இதில், கொரட்டகிரி மக்களின் கருத்துகளை கேட்ட பின்னர் ஆட்சியர் கூறியதாவது: கல்குவாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள விதிமீறல்கள் குறித்து புலதணிக்கை செய்து அறிக்கை அளிக்க ஓசூர் துணை ஆட்சியர்தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் மாசு ஏற்படுவது குறித்தும் கிரஷர் குவாரிகளிலிருந்து வெளிவரும் மாசுகளின் அளவீடுகள் குறித்தும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமத்தின் வழியாக கனரக வாகனங்கள் முற்றிலும் செல்ல தடை விதிக்க இயலாது. எனவே குறைந்த அளவிலான வாகனங்களை மட்டும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பள்ளி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் இயக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். வாகனங்கள் அனைத்தும் கொரட்டகிரி கிராமம் வழியாக செல்லாமல் வெவ்வேறு மாற்று பாதைகளில் செல்ல அறிவுறுத்தப்படும்.

பொதுமக்களின் இருப்பிடம் மற்றும் வேளாண் பயிர்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகள், ஜல்லி கிரஷர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எஸ்பி சரோஜ்குமார் தாகூர், ஓசூர் துணை ஆட்சியர் சரண்யா, கனிமவள துணை இயக்குநர் வேடியப்பன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே, நேற்று இரவு 8 மணிக்கு மேலும் போராட்டம் தொடர்ந்தது. கிரஷர் குவாரிகளிலிருந்து வெளிவரும் மாசுகளின் அளவீடுகள் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in