

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை அசாம் மாநில வனத்துறையிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு மறைந்தமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், 2011-ம் ஆண்டு ஜெயமால்யதா எனும் பெண் யானை வழங்கப்பட்டது. 5 வயது குட்டியாக, ஒப்பந்த அடிப்படையில் அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்ட யானை ஜெயமால்யதா முறையாக பராமரிக்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக பீட்டா அமைப்பின் (People for the Ethical Treatment of Animals - PETA) இந்தியப் பிரிவுக்கான துணை இயக்குநர் ஹர்ஷில் மகேஸ்வரி சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: யானை ஜெயமால்யதா பராமரிப்பு முறை குறித்து எங்கள் அமைப்பு சார்பில் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு யானை சங்கிலியால் கட்டப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டு இருப்பதுடன், தொடர்ந்துதுன்புறுத்தப்படுவதும் தெரியவந்தது. மேலும், பார்வையாளர்கள் பார்வையிடவும் அனுமதிக்கப்படுவதில்லை.
இதுதவிர அசாம் மாநிலத்தின் வனத்துறையிடம் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த யானை பராமரிப்பு ஒப்பந்த காலமும் முடிந்துவிட்டது. ஆனால், இதையெல்லாம் மறைத்து யானை நலமாகஇருப்பதாக தமிழக அறநிலையத்துறை தரப்பில் கூறப்படுவது ஏற்புடையதாக இல்லை. தற்போது யானைக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதால் முதல்கட்டமாக அதை மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதன் பின்னர் அசாம் மாநில வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் யானைகள் பழிவாங்கும் குணத்தை கொண்டவைகளாகும். அதன்படி கடந்த15 ஆண்டுகளில் கேரள மாநிலத்தில் மட்டும் பாகன்கள் உட்பட 526 பேரை யானைகள் கொன்றுள்ளன. தமிழகத்திலும் மதுரை, திருச்சிஉட்பட சில கோயில்களிலும் யானைகள் பாகன்களை கொன்றுள்ளன. இதை உணர்ந்து தமிழக அறநிலையத் துறை யானையை அசாம் அரசிடம் ஒப்படைக்கமுன்வர வேண்டும். இந்த விவகாரத்தில் அசாம் அரசும் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். உரிய நடவடிக்கை இல்லாவிட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.