

சென்னை: தொழிற்சாலை பணியாளர்களுக்கு உணவு தயாரிப்பின்போது பாதுகாப்பு மற்றும் சுகாதார கோட்பாடுகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பு குழுக்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலை உணவகங்களில் உணவு வழி தொற்று காரணமாக ஏற்படும் அசாதாரண நிகழ்வுகளை தடுக்க தொழிற்சாலை நிர்வாகபிரதிநிதிகள், தொழிற்சாலை உணவகங்களின் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று கிண்டியில் உள்ள இயக்ககத்தில் நடைபெற்றது. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வே.செந்தில்குமார் கூட்டத்துக்கு தலைமையேற்றார். அப்போது, தொழிற்சாலை நிர்வாகத்தால் உணவகங்களில் கடைபிடிக்கப்பட வேண்டியவை குறித்து எடுத்துரைத்தார். இதில் தொழிற்சாலை, உணவகங்களின் பிரதிநிதிகள் 200 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இயக்குநர் செந்தில்குமார் அறிவுறுத்தியதாவது: உணவு தயாரிக்கும் இடங்களை தொழிற்சாலை நிர்வாகத்தினர் குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பு குழுக்களை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். உணவு தயாரிப்பின்போது பாதுகாப்பு மற்றும் சுகாதார கோட்பாடுகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உணவு தயாரிக்கும் இடங்கள், தானியக்கிடங்கு மற்றும் உணவருந்தும் இடங்களில் பூச்சி, எலி போன்ற நோய்பரப்பும் காரணிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
உணவு தரக் கட்டுப்பாடு சான்றுபெற்ற மூலப்பொருட்களை மட்டுமே உணவு தயாரிப்பில் பயன்படுத்த வேண்டும். தொழிலாளர்களிடம் இருந்து பெறப்படும் உணவுசம்பந்தமான புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும். சமையலறை மற்றும் உணவகங்கள் போதிய வெளிச்சம் மற்றும்காற்றோட்ட வசதிகளுடன் செயல்படுவதையும், சமையலறையில் போதிய வெப்பத்தை வெளியேற்றும் அமைப்புகள் ஏற்படுத்துவதை தொழிற்சாலை நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் கோட்ட இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், மருத்துவ அலுவலர் மற்றும் உதவி இயக்குநர்கள் பங்கேற்றனர்.