Published : 16 Nov 2022 07:16 AM
Last Updated : 16 Nov 2022 07:16 AM
சென்னை: மண்டைக்காட்டில் கடந்த 1982-ம்ஆண்டு ஏற்பட்ட கலவரம் தொடர்பான வேணுகோபால் ஆணையத்தின் பரிந்துரைகளை சட்டமாக்கி அமல்படுத்த வேண்டும் என்று பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, பாஜக சட்டப்பேரவை கட்சித்தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சந்தித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
முதல்வரை சந்தித்து தொகுதிக்கான கோரிக்கைகளை முன் வைத்தோம். கடந்த 1982-ல் மண்டைக்காடு திருவிழாவின்போது கலவரம்ஏற்பட்டது. அதன்பிறகு 2 ஆண்டுகள் அம்மாவட்டத்தில் அமைதியற்ற சூழல் நிலவியது. அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் இதுபோன்ற கலவரம்ஏற்படாமல் இருக்க வேணுகோபால் விசாரணை ஆணையத்தை அமைத்தார். அங்கு கலவரம் ஏற்பட காரணம், அங்கிருந்த வழிபாட்டுதலத்துக்கு அருகில், மற்றொரு வழிபாட்டுதலம் திடீரென அமைக்கப்பட்டதுதான் என்றுஆணையம் தெளிவாக கூறிஉள்ளது.
எனவே, இனி எதிர்காலத்தில் வழிபாட்டு தலங்களை கட்ட எதிர்ப்பு இருக்கக் கூடாது. இருந்தால் முறைப்படி அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று கட்டவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. குமரி மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் எதிர்காலத்தில் மத மோதல்கள் ஏற்படாமல் இருக்க, வேணுகோபால் ஆணையத்தின் பரிந்துரையை அரசாணையாக வெளியிட்டு சட்டமாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
இதுதவிர, நெல்லை மானூர்குளத்துக்கு கோரையாற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதுடன், கங்கைகொண்டான், ராஜவல்லிபுரம் கோயில்களுக்கு திருத்தேர் செய்ய வேண்டும். நெல்லையப்பர் கோயிலுக்கு ரதவீதியைச் சுற்றியும் நிலத்துக்கு அடியில் கேபிள் அமைத்து தேர் வசதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். நாங்கள் கூறியவற்றை முழுமையாக கேட்ட முதல்வர்ஸ்டாலின், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார். மேலும், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க நிலம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT