Published : 30 Nov 2016 02:33 PM
Last Updated : 30 Nov 2016 02:33 PM

இடப்பற்றாக்குறையால் திணறும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம்: மாற்று ஏற்பாடுகள் செய்ய மக்கள் வலியுறுத்தல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் பழைய முனிசிபல் அலுவலகம் அருகே முன்பு செயல்பட்டு வந்தது. அங்கு நெருக்கடி நிலவியதால் 1984-ல் குமரன் திடல் பகுதிக்கு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் மாற்றப்பட்டது. தினமும் சுமார் 350 பேருந்துகள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வந்து, செல்கின்றன. நாள்தோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வருகின்றனர்.

உதகை சீசன்

உதகை, குன்னூரில் சீசன் நிலவும்போது பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையம் வழியே செல்கின்றனர். அதேபோல, இங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு அமாவாசை நாட்களில் ஒரு லட்சம் பேரும், ஆடி அமாவாசை நாளில் அதைப்போல இருமடங்கு பக்தர்களும் வருகின்றனர்.

கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சென்னை, ராஜபாளையம், தூத்துக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர் என தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து மேட்டுப்பாளையத்துக்குப் பேருந்துகள் வந்து, செல்கின்றன.

உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து மிக அதிகமானோர் செல்கின்றனர். இந்தப் பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகள் மட்டுமின்றி, நகரப் பேருந்துகளும் நிறுத்தப்படுகின்றன. மேலும், பேருந்து நிலையத்திலேயே ஆட்டோ ஸ்டாண்ட், டாக்சி ஸ்டாண்ட் ஆகியவையும் உள்ளன. மேலும், இந்தப் பேருந்து நிலையத்துக்கு 5 வழிகள் இருப்பதால், இருசக்கர, நான்குசக்கர வாகனங்களில் வருவோரும் பேருந்து நிலையத்துக்குள்ளேயே வந்து, வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் கடும் நெருக்கடி நிலவுவதுடன், அவ்வப்போது விபத்துகளும் நேரிடுகின்றன.

நகரப் பேருந்து நிலையம்

இதுகுறித்து பேருந்து நிலையத்தில் கடை நடத்தி வரும் அமானுல்லா(58) ‘தி இந்து’விடம் கூறியது: சீசன் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் பேருந்து நிலையத்தில் கடும் நெருக்கடி நிலவுகிறது. எனவே, இந்தப் பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றினால் நல்லது. திருப்பூர் சாலையில் நீரேற்று நிலையம் அருகே 8 ஏக்கரில் இடம் உள்ளது. குறைந்தபட்சம், அன்னூர், திருப்பூர், சத்தியமங்கலம் செல்லும் பேருந்துகளையாவது அங்கு நிறுத்த ஏற்பாடு செய்யலாம். அல்லது நகரப் பேருந்துகளை நிறுத்த தனி பேருந்து நிலையத்தை உருவாக்கலாம். உதகை, கோத்தகிரி, கோவை செல்லும் பேருந்துகளை மட்டும் இங்கிருந்து இயக்கலாம்.

கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு பயணிகள் ரயில் இயங்குகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் செயல்படாது. அப்போது போக்குவரத்துக்கு பேருந்துகளை மட்டுமே மக்களும், சுற்றுலாப் பயணிகளும் பயன்படுத்த வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் மிக அதிக நெருக்கடி இப்பேருந்து நிலையத்தில் நிலவுகிறது.

மேலும், இப்பேருந்து நிலையத்தில் போதுமான அளவுக்கு ஹோட்டல்களும் இல்லை. கூடுதல் விலைக்கு டீ மற்றும் உணவுப்பொருட்கள் விற்கப்படுவதால், ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல, போதுமான அளவுக்கு குடிநீர் வசதியும் கிடையாது. கழிப்பிடங்கள் தூய்மையாகப் பராமரிக்கப்படுவதில்லை.

இங்கு இரவுக் காவலர் இல்லாததால், இரவு நேரங்களில் பிச்சைக்காரர்கள் மற்றும் சமூக விரோதிகளின் புகலிடமாக இப்பேருந்து நிலையம் விளங்குகிறது என்றார்.

உதகையைச் சேர்ந்த சசிகலா(40) கூறும்போது, “மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்குச் செல்ல போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. அதேபோல, கூடலூர், கோத்தகிரிக்குச் செல்லும் பேருந்துகளிலும் அதிக கூட்டம் உள்ளது. குறிப்பாக, இரவு 9 மணிக்குமேல் பேருந்துகள் இல்லாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்” என்றார்.

பேருந்தில் ஏற அடிதடி

கோத்தகிரியைச் சேர்ந்த அஜீஸ்(48) கூறும்போது, பல்வேறு பகுதிகளுக்கு இரவு 9 மணிக்குமேல் மேட்டுப்பாளையத்திலிருந்து பேருந்து கிடையாது. மேலும், பல பேருந்துகள் மெயின் ரோட்டிலேயே பயணிகளை இறக்கிவிட்டு, சென்றுவிடுகின்றன. இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருப்போர் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

சில நேரங்களில் விடியவிடிய பேருந்து நிலையத்துக்குள்ளேயே காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், குழந்தைகளுடன் வருவோர், முதியோர் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் பேருந்துகளில் ஏற அடிதடியே நடக்கிறது. எனவே, இதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வது அவசியம்” என்றார்.

டாஸ்மாக் கடையால் அவதி…

மேட்டுப்பாளையம் நகராட்சி முன்னாள் கவுன்சிலரும், காங்கிரஸ் கட்சி நகரத் தலைவருமான எம்.தங்கமணி கூறியது: பேருந்து ஓட்டுநர்கள் பலர் பேருந்து நிலையத்துக்குள் உரிய இடத்தில் பேருந்துகளை நிறுத்தாமல், தங்கள் இஷ்டம்போல நிறுத்திக்கொண்டு, போட்டிபோட்டுக் கொண்டு பேருந்துகளை இயக்குகின்றனர்.

பேருந்து நிலையத்தின் அருகிலேயே இருக்கும் டாஸ்மாக் கடையால், அவ்வழியே பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லை. இதனால் பேருந்துக்காக நீண்டநேரம் காத்திருக்கும்போது, நின்றுகொண்டே இருக்க வேண்டியுள்ளது. கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் திறந்த வெளியிலேயே வெளியேறுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், காவலர் இல்லாததால், சுற்றியுள்ள காம்பவுன்ட் சுவரிலேயே சிலர் சிறுநீர் கழிக்கின்றனர். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு, நகராட்சி சார்பில் விடுதியைக் கட்டினால், மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். பேருந்து நிலையத்தில் சிறிய வியாபாரிகள் அமர்ந்துகொண்டும், கூடைகளை வைத்துக்கொண்டும் இருப்பதால், பயணிகள் சிரமப்படுகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x