

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்ட் 12-ம் தேதி வரை 22 நாட்கள் கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2014-15ம் ஆண்டுக்கான பட்ஜெட், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருந்ததால் பட்ஜெட் மீதான விவாதம் மட்டும் நடந்தது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், துறை வாரியான மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்து நிறைவேற்றுவதற்காக சட்டசபை கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்ய பேரவை அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம், சபாநாயகர் ப.தனபால் தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சக்கரபாணி (திமுக), மோகன்ராஜ் (தேமுதிக), கோபிநாத் (காங்கிரஸ்), சவுந்திரராஜன் (மார்க்சிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஜவாஹிருல்லா (மமக), கதிரவன் (பார்வர்டு பிளாக்) உள்ளிட்ட அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் சபாநாயகர் தனபால் கூறியதாவது:
சட்டசபை கூட்டத் தொடர் வரும் 10 ம் தேதி (நாளை) தொடங்குகிறது. காலை 10 மணிக்கு அவை கூடும். விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் அவை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும். கூட்டத் தொடர் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை மொத்தம் 22 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும். தினமும் கேள்வி நேரம் இடம் பெறும். முக்கிய சட்ட மசோதாக்களும் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நாளான வியாழக்கிழமை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, செய்தி, சிறப்பு திட்ட செயலாக்கம் ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. 11-ம் தேதி குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். 14-ம் தேதி (திங்கள்கிழமை) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது.
மவுலிவாக்கம் கட்டிட விபத்து, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அமைச்சரவைக் கூட்டம்
சட்டசபை கூடவுள்ள நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில், பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.