

கீழ்பாக்கம் மேடவாக்கம் குளம் சாலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (31). கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கணக்காளராக கோபால கிருஷ்ணன் (22) என்பவர் பணி செய்து வந்தார்.
இந்நிலையில், தன்னிடம் உள்ள ரூ.10 லட்சம் மதிப்புள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற வேண்டும் என்று கோபாலகிருஷ்ணனிடம் செந்தில்குமார் தெரிவித்தார். தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் பணத்தை மாற்றி தருவதாக கோபாலகிருஷ்ணன் உறுதி அளித்தார்.
அதன்படி, ரூ.10 லட்சத்தை பெற்றுக்கொண்ட கோபாலகிருஷ்ணன் தனது நண்பர்களான மாத்தூர் அரிகிருஷ்ணன்(27), கொடுங்கையூர் பரத்(26), எருக்கஞ்சேரி டேவிட்(25) ஆகியோருடன் பணத்தை மாற்ற காரில் சென்று கொண்டு இருந்தார். 3 பேரும் பணத்தை மாற்றி தருவதாக கோபாலகிருஷ்ணனிடம் உறுதி அளித்திருந்தனர்.
இந்நிலையில், திடீரென 3 பேரும் கோபால கிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்தி பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து, தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து அரிகிருஷ்ணன், பரத், டேவிட் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.