

கேரளத்தில் இருந்து கோவை நோக்கி வந்த பயணிகள் ரயில் மோதி யானை ஒன்று உயிரிழந்தது. கோவை - பாலக்காடு ரயில் பாதையில் கடந்த 6 மாதங்களில் 4 யானைகள் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாறு, கோவை மாவட்டத்தில் மதுக்கரை வனப் பகுதி ஆகியவற்றில் யானைகள் அதிகளவில் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக செல்லும் தமிழகம் - கேரளம் இடையிலான ரயில் பாதை, வன விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால் விபத்தில் சிக்கி யானைகள் பலியாவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை பாலக்காட்டில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் கோவை வந்து கொண்டிருந்தது. கேரளத்தில் கஞ்சிக்கோடு அருகே உள்ள வட்டக்காடு எனும் இடத்தில், ரயில் பாதையைக் கடக்க முயன்ற காட்டுயானை மீது ரயில் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த யானை அதே இடத்தில் உயிரிழந்தது. இதையடுத்து அந்த ரயில் கஞ்சிக்கோட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, மற்றொரு ரயில் பாதையில் இயக்கப்பட்டது. ரயில்வே நிர்வாகத்தினர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த கேரள வனத்துறையினர் யானை யின் உடலை ரயில் பாதையில் இருந்து மீட்டனர்.
பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு அதே பகுதியில் உடல் அடக்கம் செய்யப் படும் என அவர்கள் தெரிவித்தனர்.
கோவை - பாலக்காடு இடையே யான ரயில் பாதை சுமார் 20 கி.மீ தூரம் அடர்ந்த காப்புக் காட்டுக்குள் செல்கிறது. இதில் கடந்த 2008-ம் ஆண்டு மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையத்தில் 3 யானைகளும், அதில் ஒரு யானை யின் வயிற்றில் இருந்த குட்டியும் ரயில் மோதி உயிரிழந்தன. இந்த ஆண்டில் மட்டும் 4 யானைகள் ரயில் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளன.
மதுக்கரை - வாளையாறு வனப்பகுதியில் வனவிலங்குகள் இறப்பைத் தடுக்க மணிக்கு 30 கி.மீ. வேகத்துக்கும் குறைவாக ரயிலை இயக்க வேண்டும் என வனத்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப் பினும், வேகக் கட்டுப்பாட்டை ரயில்வே நிர்வாகம் மீறுவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதாக சூழலியல் செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.