

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மூத்தோர் பிரிவில் சக்திவேல் மற்றும் மிக மூத்தோர் பிாிவில் கிஷோர் ஆகியோர் கம்பு ஊன்றி தாண்டுதல் (போல்வால்ட்) பிரிவில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அரூர் அரசுப் பள்ளி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால், மாநில அளவில் வெற்றிபெற முடியாத நிலை நிலவுகிறது. போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தகுந்தபோல்வால்ட் கம்பு இல்லாததே காரணமாக கூறப்பட்டது. அரூர் போன்ற சிறு நகரங்களில் இப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மூங்கிலால் ஆன கம்புகளை கொண்டு தாண்டுகின்றனர்.
ஆனால் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுபவர்கள் பைபராலான கம்புகளை பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்த தெரியாத நிலையில் அரூர் பள்ளி வீரர்கள் முயற்சி செய்தும் வெற்றி பெற இயலாத நிலை உள்ளது. இதுகுறித்த செய்தி `இந்த தமிழ் திசை' நாளிதழில் வெளியானது.
இந்நிலையில், அரூர் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை வீணாக்கக் கூடாது என்று கருதிய அரூர் பகுதி பொதுமக்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ரூ.42 ஆயிரம் சேர்த்து போல்வால்ட் கம்பினை வாங்கி, அதனை பள்ளியில் ஒப்படைத்தனர். மாநில அளவிலான போட்டிக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் வீரா்கள் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு மாநிலப் போட்டியில் வெற்றி பெற்று அரூர் பகுதிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் வாழ்த்தினர்.