

சென்னை: சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் - காவல் துறை நல்லுறவை மேம்படுத்த குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுடன் போலீஸார் கலந்தாய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் சென்னையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் என 143 இடங்களில், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் பொதுமக்களுடன் போலீஸார் கலந்தாய்வுமேற்கொண்டனர். அதோடு மட்டும்அல்லாமல் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளையும் வழங்கினர்.
மேலும், சந்தேக நபர்கள் குறித்தும், குற்றச் சம்பவங்கள் குறித்தும் அறிய நேர்ந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல்தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர். முக்கியமாகக் காவல் துறை உதவி எண்-100,அவசர உதவி எண்-112, பெண்கள் உதவி மையம் எண்-1091, முதியோர் உதவி மையம் எண்-1253, குழந்தைகள் உதவி மையம்எண்-1098 குறித்து எடுத்துரைத்து, இவற்றை குறித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் “முத்துவும் முப்பது திருடர்களும்” என்ற சைபர் க்ரைம் குற்ற விழிப்புணர்வு புத்தகங்கள் குடியிருப்போர் நலச் சங்கநிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டு, சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது குடியிருப்போர் நலச் சங்கங்களைச் சேர்ந்த 2,839 பேர் கலந்து கொண்டு பயனடைந்ததாகக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.