வாயலூர் பாலாற்று தடுப்பணையில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்: தண்டலம் ஏரியில் உடைப்பு
கல்பாக்கம்/மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதாலும், செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்காலும், பாலாற்றில் அதிக அளவில் நீரோட்டம் ஏற்பட்டுள்ளது. வாயலூர் தடுப்பணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேறி கடலில் கலந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், திருக்கழுகுன்றம், படாளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பாலாற்றிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு, செங்கல்பட்டு அருகே நீஞ்சல் மடுவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் படாளம் பகுதியில் இருந்து பாலாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இதனால், பழையசீவரம், வல்லிபுரம், வாயலூர் தடுப்பணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில், வாயலூர் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணையில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி அளவில் உபரிநீர் வெளியேறி கடலில் கலந்து வருவதாக, பாலாறு கீழ்வடி நிலக்கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், இரும்புலிச்சேரி பகுதியில் இருந்து வாயலூர் பகுதி வரை பாலாற்றின் கரையோர கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பக்கிங்ஹாம் கால்வாய்: கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய்க்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அதிக அளவில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், புதுப்பட்டினம் ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், உய்யாலிக்குப்பம், ஐந்துகாணி, காரைத்திட்டு இருளர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதால், இப்பகுதிகள் தீவுகளாக மாறியுள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை. உய்யாலிக்குப்பம் பகுதியில் கடலின் முகத்துவாரத்தில் கால்வாய் வெட்டப்பட்டுள்ளதால், புதுப்பட்டினம் ஊராட்சி பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது.
தண்டலம் ஏரி: சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட தண்டலம் கிராமத்தில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் உள்ள தண்டலம் ஏரியால் சுமார் 400 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏரியின் மதகு பழுதான நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஏரியின் நீர்மட்டம் அதிகரித்ததும் மதகின் இரு புறங்களிலும் கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியது. இதையடுத்து, கிராம பொதுமக்கள் கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி, தற்காலிகமாக தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர். தகவல் அறிந்து வந்த பொதுப்பணித் துறையினர் கூடுதலாக மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சரி செய்தனர். இதனால், சேதமடைந்துள்ள மதகு பகுதி, ஏரிக்கரையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
