Published : 14 Nov 2016 02:27 PM
Last Updated : 14 Nov 2016 02:27 PM

மங்கள்யான் செயல்பாட்டுக்கு ரூபாய் நோட்டில் கவுரவம்: மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

புதிதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் படம் அச்சிடப்பட்டுள்ளது, அதன் தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட குழுவுக்குக் கிடைத்த கவுரவம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) மாதம் ஒரு செயற்கைக் கோள் அனுப்பும் திட்டத்தின்படி இம்மாத இறுதியில் ‘இன்சாட் 2ஏ’ என்ற செயற்கைக் கோள் அனுப்பப்படுகிறது. இந்த செயற்கைக் கோள் விவசாயம், வானிலை, கனிம வளம் போன்றவை குறித்து ஆய்வு செய்து, ஒவ்வொரு வாரமும் ஆய்வு தகவல்களை அனுப்பும்.

வானிலை குறித்த தகவல்களை 6 மாதங்களுக்கு முன்பே கணித்துக் கூறும் வசதி வளர்ந்த நாடுகளில்கூட இல்லை. நாம் அனுப்பும் செயற்கைக் கோள்கள் மூலம் தட்ப வெப்ப மாறுதல்களை முன்கூட்டியே கண்டறிய ஆய்வு நடந்து வருகிறது.

தற்போது மங்கள்யான் தனது சுற்றுப்பாதையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சுற்றி வருகிறது. அதற்கான ஆயுட்காலம் 6 மாதம் என்ற நிலையில், அதனை நீட்டிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டில், மங்கள்யான் படத்தை அச்சிட்டுள்ளது, மங்கள்யான் செயல்பாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். இதன் மூலம், மங்கள்யான் தயாரிப்பில் இருந்த எனக்கும், எங்கள் குழுவுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நிலவியல் ஆய்வுக்காக சந்திராயன் விண்கலத்தை மூன்றுகட்டமாக அனுப்ப திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக சந்திராயன்- 1 அனுப்பப்பட்டு, அதை நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தி ஆய்வு செய்தபோது, நிலவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக 2017-ம் ஆண்டு இறுதியில் சந்திராயன் 2 அனுப்பப்படும்போது, செயற்கைக் கோளுடன் 6 சக்கரங்களுடன் கூடிய வாகனத்தை பாதுகாப்பாக சந்திரனில் இறக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக பெங்களூருவில் நிலவு போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அதில் மனிதனை எவ்வாறு பாதுகாப்பாக இறக்குவோமோ அதுபோல 6 சக்கர வாகனத்தை இறக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாகனம் நிலவில் இறங்கும்போது அங்கு உள்ள தகவல்களை அனுப்பும். அதற்கு அடுத்தகட்டமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணிகளை தொடங்க உள்ளோம்.

பூமியை நீள்வட்டப் பாதையில் நிலா சுற்றி வருகிறது. பூமியை நிலா நெருங்கும்போது பவுர்ணமி ஏற்படுகிறது. தற்போது வர உள்ள பவுர்ணமி நாளில், நீள்வட்டப் பாதையின் அமைப்பின்படி பூமியை நிலா மிகவும் நெருங்கி வருகிறது. இதனால், பூமியில் இருந்து நிலாவை பார்த்தால் மிகவும் பெரியதாக தோன்றும். இது அரிதான நிகழ்வாகும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ஈரோடு செங்குந்தர் கல்விக் கழக தொடக்கப் பள்ளியின் புதிய கட்டிடத்தை மயில்சாமி அண்ணாதுரை திறந்துவைத்தார். விழாவில், ஈரோடு செங்குந்தர் கல்விக் கழக தலைவர் சண்முகவடிவேல், செயலாளர் எஸ்.சிவானந்தன், தென்னிந்திய செங்குந்த மகாஜன தலைவர் கே.பி.கே.செல்வராஜ், பொறியியல் கல்லூரி தாளாளர் மோகன்ராஜ், மாவட்ட கல்வி அலுவலர் மகாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x