கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளியில் மரணமடைந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கும்படி மாணவியின் தந்தைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். அந்த வழக்கில் சிறப்பு புலானாய்வு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்ட நீதிமன்றம், அதன் அறிக்கைகளை பெற்று ஆராய்ந்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் சிபிசிஐடி விசாரணை அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்தார். அதில் 214 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் ராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் செல்போனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்பதெல்லாம் இல்லை. செல்போனை ஒப்படைப்பது குறித்து விளக்கத்தை பெற்று தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார். மேலும் மாணவியின் உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை" என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உடற்கூறாய்வு மூலம் எப்படி இறந்தார்கள் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம். நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரர் தனது மகள் பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் செல்போனை ஒப்படைத்தது தொடர்பாக மனு தாக்கல் செய்ய பெற்றோருக்கும், அதை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in