Published : 14 Nov 2022 02:23 PM
Last Updated : 14 Nov 2022 02:23 PM

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளியில் கலவரம் வெடித்தது. பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த கலவரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலன் விசாரணைக்குழு, பலரை கைது செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கடந்த செப்டம்பர் 26-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்து தனது கணவரை விடுவிக்க கோரி அவரது மனைவி தமிழ்பிரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.அதில், "தனது கணவர் எந்த கலவரத்தையும் தூண்டாத நிலையில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஜாமீனில் விடுதலையாவதை தடுக்கும் வகையில், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு நகல் ஆங்கிலத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதன் தமிழ் மொழி பெயர்ப்பு வழங்கப்படவில்லை" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x