Published : 14 Nov 2022 05:23 AM
Last Updated : 14 Nov 2022 05:23 AM

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் 15 ஆயிரம் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்: பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்கள்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், 34,852 ஹெக்டேர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இங்கு மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

சீர்காழியில் வரலாறு காணாத வகையில் கடந்த 11-ம் தேதி 44 செ.மீ. மழை பதிவாகியது. இதனால், சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள் நீரில் மூழ்கி, சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

இந்நிலையில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, வி.செந்தில்பாலாஜி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மழையால் பாதிக்கப்பட்ட வயல்கள், குடியிருப்புப் பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

சீர்காழி, திருவெண்காடு, எடமணல், மணிக்கிராமம், சின்னப் பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அமைச்சர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு விநியோகம், மின் சீரமைப்புப் பணி, வெள்ளத்தை வடியவைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும் பார்வையிட்டு, அவற்றை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டனர்.

பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, “கனமழையால் எடமணல் துணை மின் நிலையம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 370 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 200 மின் கம்பங்கள் உடைந்துள்ள நிலையில், 120 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவையும் உடனடியாக மாற்றப்பட்டு, மின் விநியோகம் சீரமைக்கப்படும்” என்றார்.

அமைச்சர் மெய்யநாதன் கூறும்போது, “மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 34,852 ஹெக்டேர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. 15,000-க்கும் அதிகமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மோட்டார் பம்புமூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வசித்தவர்கள், 42 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பழையாறில் உடைப்பு ஏற்பட்டபாலம் உடனடியாக சீரமைக்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, உடனடியாக புத்தகங்கள் வழங்கப்படும். மேலும், பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு: சென்னையில் மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளன. நான் இன்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு, நாளை சீர்காழி, மயிலாடுதுறை, கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட உள்ளேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x