

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வட தமிழகத்தின் உள் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில், வட கேரள கடற்பகுதிக்கு நகர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நவ. 13-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் மிக கனமழையும், 32 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
உத்திரமேரூரில் 17 செ.மீ. மழை அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 17 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 13 செ.மீ., ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 12 செ.மீ.,செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தற்போது கேரளா - தமிழகம் இடையே வளி மண்டல கீழடுக்குசுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் 14-ம் தேதி (இன்று) பெரும்பாலான இடங்களிலும், நவ.15-ம் தேதி சில இடங்களிலும், நவ. 16, 17-ம்தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ. 14-ம் தேதி லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 24 மணி நேரத்தில் 3 இடங்களில் மிக கனமழை, 32 இடங்களில் கனமழை பெய்துள்ளது.