திமுக கூட்டணியில் இருந்து காங். விலக வேண்டும்: எச்.ராஜா

திமுக கூட்டணியில் இருந்து காங். விலக வேண்டும்: எச்.ராஜா
Updated on
1 min read

ஈரோடு: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கையில், தாய்மொழி, ஆங்கிலத்துக்குப் பிறகு ஏதாவது ஒரு இந்திய மொழி என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த காலத்திலும் இந்தி திணிப்பு என்பது இருக்காது. கடந்த 55 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழ் அழிந்து வருகிறது. தமிழக திராவிட கட்சிகள் இருமொழிக் கொள்கை என்கின்றனர். ஆனால், தமிழகத்தில் மாற்றுமொழியை அடிப்படையாகக் கொண்டு, 560 பள்ளிகள் இயங்கி வருகின்றன. பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி விட்டு, பால் விற்பனை விலையை ரூ.12 உயர்த்தியுள்ளனர். இதனால், டீ விலை ரூ.15 ஆக உயர்ந்துள்ளது. இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயல். பாலுக்கு ஜிஎஸ்டி இல்லை என பால்வளத்துறை அமைச்சருக்குத் தெரியவில்லை.

‘கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை, நாம் வேகமாக செயல்பட்டு நிரப்பாமல் விட்டுவிட்டோம். ஆனால், இந்த அரசின் மீது தற்போது வெறுப்பு வரத் தொடங்கிஉள்ளது. அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நாம் வேகமாக நிரப்ப வேண்டும். அதற்காக வேகமாக செயல்பட வேண்டும்’ என நிர்வாகிகளிடம் அமித்ஷா கூறினார். இது ஒரு அரசியல் தலைவர், அவரது நிர்வாகிகளுக்கு வழிகாட்டும் வகையில் சொல்லப்பட்டது. இது விவாதத்துக்குரிய பொருள் அல்ல. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியில் வர வேண்டும். அவர்கள் விடுதலை எங்களுக்கு ஏற்புடையதல்ல என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in