தொடர்மழையால் சித்திரைச்சாவடிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல்

தொடர்மழை காரணமாக கோவை சிறுவாணி சாலை சித்திரைச்சாவடி தடுப்பணையை தாண்டி நேற்று பாய்ந்த வெள்ளம். (அடுத்த படம்) நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட கோவை குற்றாலம்.  படங்கள்: ஜெ.மனோகரன்
தொடர்மழை காரணமாக கோவை சிறுவாணி சாலை சித்திரைச்சாவடி தடுப்பணையை தாண்டி நேற்று பாய்ந்த வெள்ளம். (அடுத்த படம்) நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட கோவை குற்றாலம். படங்கள்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவை: நீர்வரத்து அதிகரிப்பால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. சித்திரைச்சாவடி தடுப்பணை வழியாக நொய்யலாற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது.

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சிறுவாணி, வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்தது.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, “சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு நேற்று 400 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. கோவையில் உள்ள பெரும்பாலான குளங்கள் ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டிவிட்டன. எனவே, ஆற்று நீர் குளங்களுக்கு திருப்பிவிடப்படவில்லை. ஆற்றிலேயே சென்று கொண்டிருக்கிறது” என்றனர்.

கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கோவை குற்றாலம் மூடப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் வெள்ளப்பெருக்கை அறியாமல் வந்த வெளிமாவட்ட, வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

வெள்ளப்பெருக்கு குறையும் வரை அருவிக்கு செல்ல பயணிகளுக்கு தடைவிதிக்கப்படும் என வனத்துறயினர் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): சின்னகல்லாறு 86, வால்பாறை பிஏபி 71, வால்பாறை தாலுகா 69, மாக்கினாம்பட்டி 59, வாரபட்டி 51, கோவை தெற்கு 35, பொள்ளாச்சி 34, ஆனைமலை தாலுகா 31, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 31, போத்தனூர் ரயில்நிலையம் 30, தொண்டாமுத்தூர் 30, பில்லூர் அணை 27, சிறுவாணி அடிவாரம் 23, விமானநிலையம் 20, மதுக்கரை, கிணத்துக்கடவு தாலுகா 16, மேட்டுப்பாளையம் 15, பெரியநாயக்கன்பாளையம் 14 மி.மீ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in