

உடுமலை: உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. திருமூர்த்தி மலையில் பெய்த கனமழையால், அங்குள்ள பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.
கோயில் உண்டியல்களுக்குள் மழைநீர் புகாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாக்குகளை கொண்டுஉண்டியல்களை ஊழியர்கள் மூடிவைத்தனர். கோயில் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘கடந்த ஒரு வாரமாகவே பஞ்சலிங்க அருவியில்தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. கோயில் வளாகத்தை சூழ்ந்திருந்த மழை நீர் ஓரளவுக்கு வடிந்ததால் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன’’ என்றனர்.
குடிமங்கலம் ஒன்றியத்துக்குட் பட்ட பொன்னேரி கிராமத்தில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். அதேபோல மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட தாசர்பட்டியிலும் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்தது. கடந்த 2 நாட்களாக மழைநீர் வடியாததால், வெளியில் வர முடியாமலும், நிவாரண உதவி கிடைக்காமலும் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஜல்லிப்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் குளம்போல தேங்கியது. அதனால் சிகிச்சைக்கு சென்ற நோயாளிகள் அவதியடைந்தனர்.
ஆட்சியருக்கு கோரிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் வி.சவுந்திரராஜன், ஏஐடியுசி சங்க நிர்வாகி கிட்டு (எ) கிருஷ்ணசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ‘உடுமலையில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் நூறு நாள் வேலையை மட்டுமே நம்பியுள்ள விவசாய கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை வருவாய் துறை அதிகாரிகள் கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம்கள் ஏற்படுத்தவோ, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவோ நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நிவாரண முகாம்களை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை, தொடர் மழையால் நிரம்பிய நிலையில், கடந்த 10-ம் தேதிமுதல் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் அணையில் இருந்து விநாடிக்கு 17,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்றைய நிலவரப்படி முற்பகலில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், விநாடிக்கு2,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.