Published : 14 Nov 2022 04:20 AM
Last Updated : 14 Nov 2022 04:20 AM

கனமழைக்கு ஏரிக்கரை உடைப்பு: பர்கூர் அருகே 250 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

பர்கூர் அருகே மோடிகுப்பம் கிராமத்தில் உள்ள ராயல் ஏரியின் கரை உடைந்து தண்ணீர் வெளியேறி அப்பகுதியில் உள்ள வயல்களில் புகுந்தது. நீர்தேங்கிய வயலில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்களை சோகத்துடன் பார்வையிட்ட விவசாயிகள்.

கிருஷ்ணகிரி: கனமழைக்கு பர்கூர் அருகே மோடிகுப்பம் கிராமத்தில் ஏரிக்கரை உடைந்து, 250 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்து நெற்கதிர்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பர்கூர் ஊராட்சி ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோடிகுப்பம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 1,000-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

500 ஏக்கர் பாசன வசதி: இக்கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ராயல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், இப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக இருந்து வருகிறது.கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இப்பகுதியில் பெய்த பரவலான மழையால், ஏரி நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பெய்த கனமழைக்கு ஏரி நிரம்பியது. மேலும், ஏரிக்கரை உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்து வெளியேறிய நீர் நெல்வயல் களில் புகுந்தது. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கின.

சீரான பணி இல்லை: இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் உள்ள ராயல் ஏரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தூர்வாரப்பட்டது. இப்பணியை சீராக மேற்கொள்ளவில்லை. குறிப்பாக கரையை பலப்படுத்தாமல் விட்டுவிட்டனர். இதுதொடர்பாக நாங்கள் அப்போது புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழைக்கு ஏரி நிரம்பி, கரையில் உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து நெற்கதிர்கள் நீரில்மூழ்கின.

2 அடி தேங்கிய நீர்: மேலும், வயலில் 2 அடிக்கு தண்ணீர் நிற்பதால், நெற்கதிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 250 ஏக்கர் பரப்பளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ராகி மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்ட தோட்டங்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உழவர் நலத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். மேலும், ஏரியின் கரையை போர்க்கால அடிப்படையில் பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x