Published : 14 Nov 2022 04:20 AM
Last Updated : 14 Nov 2022 04:20 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 5,829 கனஅடியாக அதிகரித் தது. இதையடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 908 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 964 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து விநாடிக்கு 908 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 40.02 அடியாக உள்ளது.
பயணிகளுக்கு தடை: கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,579 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6 மணி அளவில் 2,407 கனஅடியாக இருந்தது. காலை 8 மணியளவில் 5,212 கன அடியாகவும், பிற்பகலில் 5,829 கனஅடியாகவும் அதிகரித்தது.
அணையில் இருந்து விநாடிக்கு 7,236 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நீர்வளத்துறை மற்றும் வருவாய்த் துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அணை பூங்காவுக்கு செல்லும் தரைப்பாலத்தின் மேலே தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால், பாலம் வழியாக அணைக்குள் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாம்பாறு, சின்னாறு: சின்னாறு அணை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 95 மிமீ மழை பதிவானது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 18 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 284 கனஅடியாக அதிகரித்தது. அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் நீர்வரத்து முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல, பாம்பாறு அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 420 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 824 கனஅடியாக அதிகரித்தது. நீர்வரத்து முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 17.71 அடியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT