

சேலம்: பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு மாநில அரசு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், என தமிழ்நாடு ஆர்ய வைசிய மகா சபை மாநிலத் தலைவர் ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆர்ய வைசிய மகா சபையின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் பதிவியேற்பு விழா செவ்வாய்ப்பேட்டையில் நடந்தது. இதில் பங்கேற்ற மாநிலத் தலைவர் ராமசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்ய வைசிய சமூகத்தில் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர். பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு செய்து மத்திய அரசு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என அறிவித்துள்ளது.
இந்த இடஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கக்கோரி சில கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனை கைவிட வேண்டும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு மாநில அரசு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரையும், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் விரைவில் சந்தித்து எங்கள் நிலைப்பாடு குறித்து எடுத்துரைக்கவுள்ளோம், என்றார்.