Published : 14 Nov 2022 04:25 AM
Last Updated : 14 Nov 2022 04:25 AM
நாமக்கல்: திருமணிமுத்தாற்றில் ரசாயனக் கழிவு கலப்பதால் மோகனுார் சுற்றுவட்டார பகுதியில் வெற்றிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வருவாய் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர்சுற்றுவட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வாழை, வெற்றிலை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பிரதானமாக சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. பாசன நீர் ஆதாரமாக காவிரி மற்றும் திருமணிமுத்தாறு இருந்து வருகிறது.
இந்நிலையில், திருமணிமுத்தாற்றில் ரசாயனக் கழிவு நீர்கலப்பதால் மோகனூர் பகுதியில் வெற்றிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: மோகனூர், ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, பாலப்பட்டி, குமரிபாளையம், குன்னிபாளையம், மணப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் திருமணிமுத்தாறு பாசனத்தை மையப்படுத்தி வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. வெற்றிலை சாகுபடியில் ஈடுபடும் பெரும்பாலான விவசாயிகள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
ஒரு ஏக்கர் வெற்றிலை சாகுபடி மேற்கொள்ள ரூ. 20 லட்சம் வரை செலவு பிடிக்கும். வெற்றிலை நடவு செய்யப்பட்ட நாளிலிருந்து 10-வது மாதம் முதல் அறுவடை செய்யலாம். பராமரிப்பை பொறுத்து 5 ஆண்டுகள் வரை வெற்றிலை அறுவடை செய்ய முடியும். தற்போது, வெற்றிலை கொடிக்காலில் வெற்றிலை சுருண்டும், கருகியும் காணப்படுகிறது. உரமிடுவதால் ஏற்பட்ட பாதிப்பு என தொடர்புடைய உர நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேட்டோம்.
உரத்தால் பாதிப்பு இல்லை. திருமணிமுத்தாற்றில் ரசாயன கழிவு கலப்பதால் இப்பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்தனர். மேலும், சாயக்கழிவு உள்ளிட்டவை திருமணிமுத்தாற்றில் கலப்பதால் தண்ணீரின் தன்மை மாறி இப்பாதிப்பு ஏற்படுகிறது. இந்தாண்டு தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், வெற்றிலை உற்பத்தி பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் திருமணிமுத்தாற்றில் ரசாயனக் கழிவு கலப்பதை தடுத்து வெற்றிலை கொடிக்காலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT