Published : 14 Nov 2022 07:04 AM
Last Updated : 14 Nov 2022 07:04 AM
சென்னை: தமிழகத்தில் 12 ஒன்றியங்களில் உள்ள 366 டன் ஸ்கிம்டு மில்க் பவுடரை விற்க ஆவின் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. இதனால், வரும் மாதங்களில் ஆவின் பாலுக்குகடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 40 லட்சம்லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில், தரம் பிரிக்கப்பட்டு, பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.
உபரியாக இருக்கும் பாலில் இருந்து வெண்ணெய்யை பிரித்துஎடுத்த பிறகு, திடச்சத்து உள்ள பாலை உயர்வெப்பத்தில் கொதிக்கவைத்து, பவுடராக மாற்றுகின்றனர். அதாவது 10 லிட்டர் பாலை கொதிக்கவைத்து 1 கிலோ பால் பவுடராக மாற்றப்படும். இதுவே, ஸ்கிம்டு மில்க் பவுடர் ஆகும். இந்நிலையில், சேலம், நாமக்கல், திருச்சி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள 12 ஒன்றியங்களில் 366 டன்கள் ஸ்கிம்டு மில்க் பவுடர்விற்க ஆவின் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. ஒப்பந்தம் கோருபவர்கள் நவ.14-ம் தேதி (இன்று) மதியம் 1 மணிக்குள் அனுப்ப வேண்டும். மதியம் 1.30 மணிக்கு டெண்டர்திறக்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை: ஆவின் பால் கொள்முதலில் நிலவும் உண்மையான கள நிலவரம் குறித்து அரசுக்கும், முதல்வருக்கும், தலைமைச் செயலருக்கும் தெரிவிக்காமல் மறைக்கப்படும் நிலையில், தற்போது மாவட்ட ஒன்றியங்களில் கையிருப்பு இருக்கும் ஸ்கிம்டு மில்க் பவுடரையும் (SMP) விற்பனை செய்ய நிர்வாகம் டெண்டர் கோரியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆவின் நிர்வாகத்தின் இந்தசெயல்பாடுகள், வரும் மாதங்களில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வழிவகுக்கும்.
ஆவின் பால் கொள்முதல் கடுமையாக வீழ்ச்சியடைய தொடங்கியுள்ள இந்த இக்கட்டான தருணத்தில், கையிருப்பில் இருக்கும் ஸ்கிம்டு பால் பவுடரை விற்பனை செய்ய ஆவின் நிர்வாக அதிகாரிகள் துடிக்கின்றனர். ‘தனக்கு மிஞ்சிதான், தான தர்மம்’ என்பதை கவனத்தில் கொண்டு அவர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT