

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்றும் பரவலாக மழை தொடர்ந்தது. கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை வயல் பகுதியில் உள்ள பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மலைக்கிராம விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
சேதமடைந்த விளைநிலங்களுக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு தர வேண்டும் என பாதிக் கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோன்று பள்ளங்கி, கோம்பை கிராமம் வழியே ஓடும் ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மூங்கில் காடு மலைக்கிராம மக்கள் வெளியே செல்ல வழியின்றி கிராமங்களிலேயே முடங்கினர்.
தாண்டிக்குடி: தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பெரும்பாறை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. மஞ்சள் பரப்பு கிராமத்தில் மழைக்கு அரசமரம் வேரோடு சாய்ந்தது. இதில் கோயில் மற்றும் வீடு சேதமானது.
சாய்ந்து விழுந்த மரம் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் 2 மின் கம்பங்கள் சாய்ந்ததில் மின் விநியோகம் பாதித்தது. தகவலறிந்து வந்த மின்வாரிய உதவிப் பொறியாளர் செல்லகாமாட்சி தலைமையிலான ஊழியர்கள் புதிய மின்கம்பங்களை ஊன்றினர். அதன்பிறகு மின் விநியோகம் சீரானது.