

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மிக கனமழையால் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் முழுமையாக மழைநீரில் மூழ்கியுள்ளன. பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து, பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நவ.10, 11 ஆகிய தேதிகளில் தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் மிக கனமழைபெய்தது. சீர்காழியில் மட்டும் ஒரேநாளில் (நவ.11) 44 செ.மீ மழை பதிவாகியது.
இதனால், சீர்காழி, ஆச்சாள்புரம், திருவெண்காடு, பூம்புகார், தலைச்சங்காடு, கொள்ளிடம், தரங்கம்பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் முழுமையாக மழைநீரில் மூழ்கியுள்ளன. மாவட்டம் முழுவதும் 1 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வரப்புகளே வெளியே தெரியாத அளவுக்கு வயல்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
சீர்காழி, தென்பாதி, சட்டநாதபுரம், சூரக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தென்பாதி, சட்டநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று லேசாக மழைநீர் வடிந்துள்ளது. கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால், தொடர்ந்து மழைநீர் வடிந்து வருகிறது.
எனினும், சில இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலை உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 40-க்கும் அதிகமான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழைநீர் சூழ்ந்து, வெளியேற முடியாத பகுதிகளில் சிக்கியுள்ளவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சீர்காழி நகரப் பகுதி, தென்பாதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்ட நிலையில், எடமணல், ஆலங்காடு, நல்லூர், புளியந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலைவரை மின் விநியோகம் சீரமைக்கப்படவில்லை. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து300-க்கும் அதிகமான மின் பணியாளர்கள், ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து சம்பா நெற்பயிர்கள், வாழைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாலும், வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாலும் மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பாதிப்புகள் குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.