

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் நேற்றிரவு முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து 100 ரூபாய் நோட்டுகளை எடுக்க சென்னையில் உள்ள ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதியது. இதனிடையே புதிய நோட்டுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து 100 ரூபாய் நோட்டுகளை எடுக்கவும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செலுத்தவும் ஏடிஎம் மையங்கள் முன்பு மக்கள் குவிந்தனர். பல இடங்களில் அவர்கள் ஏடிஎம் மையங்கள் முன்பு வாகனங்களை நிறுத்திவிட்டு நின்றதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டது. ஹோட்டல்களில் மக்கள் சர்வ சாதாரணமாக 500 ரூபாய் நோட்டுகளை செலவழிக்க முற்பட்டதைக் காண முடிந்தது.
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு களை கொடுத்து பெட்ரோல், டீசல் நிரப் பிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. இருப்பினும் பல பெட்ரோல் விற்பனை நிலையங்கள் நேற்றிரவு மூடப்பட்டன. பல பெட்ரோல் பங்குகளில் ரூ.500 கொடுத்து 400 மற்றும் 450 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டவர்களுக்கு பாக்கித் தொகையை திருப்பித் தரவில்லை. கடைகள், பேரங்காடிகளிலும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர்.
பிரதமரின் இந்த அறிவிப்பால் மக்களிடம் ஒருவித பதற்றமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டது. நாளை முதல் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் அடையாள அட்டையைக் காண்பித்து 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதிக பணம் வைத்திருப் பவர்கள் செய்வதறியாமல் திகைத்துப் போயுள்ளனர்.
நாளை அறிமுகம்
இதனிடையே தடை செய்யப்பட்டுள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.