Published : 13 Nov 2022 06:33 PM
Last Updated : 13 Nov 2022 06:33 PM

திருவண்ணாமலை | இனாம்காரியந்தல் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் - மக்கள் அவதி

இனாம்காரியந்தல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் அங்கன்வாடி வீதியில் வெள்ளம்போல் தேங்கி இருக்கும் மழைநீரில் நடந்து வரும் மக்கள். | படம் :இரா.தினேஷ்குமார். ,. படம் - இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இனாம்காரியந்தல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் 40 வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளர்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (13-ம் தேதி) இரவு கன மழை பெய்தது. இதனால், கவுத்தி மலையில் பல இடங்களில் நீர் வீழ்ச்சிகள் ஏற்பட்டு, சமதள பகுதியில் வெள்ளம்போல் மழைநீர் வழிந்தோடியது. இதன் எதிரொலியாக, திருவண்ணாமலை அருகே உள்ள இனாம்காரியந்தல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் வெள்ள நீர் புகுந்தது. தாழ்வாக இருக்கும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.

இனாம்காரியந்தல் கிராமத்தில் மூதாட்டி முனியம்மா வீட்டில் புகுந்துள்ள மழைநீர்

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, ''கவுத்தி மலையில் இருந்து வழிந்து வரும் தண்ணீர் சித்தேரிக்கு செல்லும். இந்நிலையில் சித்தேரிக்கு செல்லும் நீர் வழி பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், வழித்தடத்தில் மாற்றம் ஏற்பட்டு, பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுகிறது. இந்தாண்டும் வெள்ளநீர் சூழ்ந்துவிட்டது. கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. இதனால் வீட்டில் வசிப்பவர்கள் நடுவீதிக்கு வந்துவிட்டனர். அடுத்தவர்களின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அங்கன்வாடி வீதி மற்றும் பிரதான வீதி ஆகிய 2 வீதிகளில் உள்ள 40 வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையும் உயர்த்தப்பட்டு இருப்பதால், வீடுகளுக்குள் எளிதாக மழைநீர் புகுந்துள்ளது. வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்தது. சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி நிர்வாகம், வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் பலனில்லை. நீரோடைகள் மற்றும் கால்வாயை சீரமைத்து நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x