Published : 13 Nov 2022 06:26 PM
Last Updated : 13 Nov 2022 06:26 PM

செய்யாறு, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

கலசப்பாக்கம் அருகே செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு | படங்கள் இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை மற்றும் குப்பனத்தம் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (13-ம் தேதி) இரவு கன மழை கொட்டி தீர்த்ததால், தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. விவசாய நிலங்கள், வடிகால் வசதியற்ற குடியிருப்புகள் மற்றும் காலி இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஜவ்வாதுமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குப்பனத்தம், செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை அருகே துரிஞ்சலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசிக்கும் கிராம மக்கள்.

குப்பனத்தம் அணைக்கு நள்ளிரவு நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இன்று (14-ம் தேதி) அதிகாலை 2 மணி அளவில் குப்பனத்தம் அணைக்கு விநாடிக்கு 1,500 கனஅடி நீர் வந்தது. அது அப்படியே செய்யாற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால், செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 59.04 அடி உயரம் உள்ள குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 54.25 அடியாக இருந்தது. அணையில் 579.50 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 286 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 228 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், குப்பனத்தம் அணைக்கு நள்ளிரவு நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருகே கிளியாப்பட்டு கிராமத்தில் வெள்ளநீர் சூழ்ந்து சாலையை கடந்து செல்லுகிறது.

இதேபோல், சாத்தனூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக இருக்கிறது. அணையில் 6,711 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு இன்று (14-ம் தேதி) பகல் 12 மணியளவில் விநாடிக்கு 3,400 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 4,500 கனஅடியும், காய்வாயில் விநாடிக்கு 200 கனஅடியும் என மொத்தம் விநாடிக்கு 4,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணை பகுதியில 10 மி.மீ., மழை பெய்துள்ளது. தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

திருவண்ணாமலை நகரம் அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட் அருகே உள்ள குடியிருப்பில் புகுந்துள்ள வெள்ளநீரில் மீன் பிடித்து மகிழும் மக்கள்

22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 16.40 அடியாக உள்ளது. அணையில் 52.726 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 29 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 66 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 47.80 மி.மீ., மழை பெய்துள்ளது. 62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 47.23 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 151.232 மில்லியன் கனஅடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 431 கனஅடி தண்ணீர் வருகிறது. அணை பகுதியில் 97.20 மி.மீ., மழை பெய்துள்ளது.

ஒரே நாளில் நிரம்பிய 17 ஏரிகள்: திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில் 157 ஏரிகள் நேற்று (13-ம் தேதி) காலை 6 மணி நிலவரப்படி முழுமையாக நிரம்பின. இந்நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழைக்கு, ஒரே நாளில் மேலும் 17 ஏரிகள் நிரம்பி உள்ளன. இதன்மூலம் இன்று (14-ம் தேதி) காலை 6 மணி நிலவரப்படி 174 ஏரிகள், 100 சதவீதம் கொள்ளளவை எட்டி உள்ளது.

ஜவ்வாதுமலையில் 65 மி.மீ. மழை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று(14-ம் தேதி) காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஜமுனாமரத்தூரில் (ஜவ்வாதுமலை) 65 மி.மீ., மழை பெய்துள்ளது. ஆரணியில் 34 மி.மீ., செய்யாறில் 37 மி.மீ., செங்கத்தில் 32.20 மி.மீ., வந்தவாசியில் 47.90 மி.மீ., போளூரில் 26 மி.மீ., திருவண்ணாமலையில் 26.40 மி.மீ., தண்டராம்பட்டில் 8.50 மி.மீ., கலசப்பாக்கத்தில் 61.40 மி.மீ., சேத்துப்பட்டில் 25.70 மி.மீ., கீழ்பென்னாத்தூரில் 63.60 மி.மீ., வெம்பாக்கத்தில் 24.50 மி.மீ., என மாவட்டத்தில் சராசரியாக 38 மி.மீ., மழை பெய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x