

தருமபுரி / அரூர்: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பகல் நேர தொடர் மழை காரணமாக இரண்டாவது நாளாக நேற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
நேற்று காலை வரையிலான அளவீடுகளின்படி பாலக்கோடு பகுதியில் 20 மிமீ மழை பதிவானது. இதுதவிர, பென்னாகரம் பகுதியில் 15.2, தருமபுரியில் 14, மாரண்ட அள்ளியில் 12 மிமீ. மழை பதிவானது. தருமபுரி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் பகலில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையைத் தவிர இதர சாலைகள் அனைத்திலுமே குறைவான அளவிலேயே போக்குவரத்தைக் காண முடிந்தது. தொடர்மழையால் வீடுகளிலேயே மக்கள் முடங்கினர்.
கனமழை பெய்த பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. தருமபுரி நகரில் கழிவுநீர் கால்வாய்களில் மழைநீர் பெருக்கெடுத்தது. ஒருசில இடங்களில் பிளாஸ்டிக் குப்பை அடைப்பை ஏற்படுத்தியதால் கழிவு நீருடன் கலந்த மழைநீர் இயல்பாக செல்ல முடியாமல் தேங்கியது.
அரூர் பகுதியில் தொடர் மழை: அரூர் பகுதி முழுவதும் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று இரவு வரை பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழையும், மற்ற பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர்.
தொடர் மழை காரணமாக அரூர் பேருந்து நிலையம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அதிகபட்சமாக 63 மிமீ மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): மோளையானூர் 55, அரூர் 45, தீர்த்தமலை 37, மொரப்பூர் பகுதியில் 20 மிமீ மழையும் பதிவாகி உள்ளது.
மழையால் 2 வீடுகள் சேதம்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கூலித் தொழிலாளி. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் இவரது ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. இதேபோல, பாப்பிரெட்டிப்பட்டி பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த நாசர் என்பவரது ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இது குறித்து அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.