தீப்பொறி ஆறுமுகம் மறைவு: கருணாநிதி இரங்கல்

தீப்பொறி ஆறுமுகம் மறைவு: கருணாநிதி இரங்கல்
Updated on
1 min read

திமுக தலைமைக் கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திமுக தலைமைக் கழக முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான மதுரை தீப்பொறி ஆறுமுகம் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 5-11-2016 அன்று மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

தீப்பொறி ஆறுமுகம் தனது பதினைந்தாவது வயதிலேயே தந்தை பெரியாரின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி பெரியாரால் அப்போதே பாராட்டப் பட்டவர். அவருடைய பேச்சைக் கேட்ட, அண்ணா ஆறுமுகத்துக்கு தீப்பொறி என்ற அடைமொழியைக் குறிப்பிட்டார்.

பின்னர் காலப் போக்கில் தீப்பொறி என்றாலே அவரைக் குறிப்பிடும் அளவுக்கு பெயர் பெற்றுவிட்டார். மிசா கைதியாகவும் தீப்பொறி ஆறுமுகம் சிறைவாசம் அனுபவித்தவர். தீப்பொறி ஆறுமுகத்தின் பேச்சினைக் கேட்பதற்காகவே தனிக் கூட்டம் கூடுவதுண்டு. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த தலைமைக் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.

தீப்பொறி ஆறுமுகத்தின் மறைவு குறித்து பெரிதும் வருந்துவதோடு, அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in