

சென்னை: ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவிக்கு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் முறைகேடாக வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் எந்த ஆவணங்களும் இல்லாமல் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூரில் 3 ஆயிரத்து 457 சதுர அடி மற்றும் 4 ஆயிரத்து 763 சதுரஅடி வீட்டுமனைகளை தமிழக அரசு கடந்த 2008-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலங்களை வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துள்ளதாகவும், அதற்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறி அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், முன்னாள் முதல்வரின் நேர்முக உதவியாளர் ராஜமாணிக்கம், அவரது மகன் துர்கா சங்கர், வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் முருகையா, கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த உதயக்குமார் ஆகிய 7 பேருக்கு எதிராக கடந்த 2013-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
நிலுவையில் வழக்கு: இந்த வழக்கைப்பதிவு செய்யும் முன்பாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெறாத காரணத்தால் ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர்சேட், வீட்டுவசதி வாரியத்தின் அப்போதைய செயற்பொறியாளர் முருகையா ஆகியோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன், துர்கா சங்கர் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு சென்னை எம்பி,எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பர்வீன், கே.ராஜமாணிக்கம், ஆர்.துர்காசங்கர் ஆகிய 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்தது.
வழக்கைவிசாரித்த நீதிபதி, மனுதாரர்களுக்கு எதிராக புலன் விசாரணையில் திரட்டப்பட்ட ஆவணங்கள், பிற ஆதாரங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம் இந்த வழக்கைத் தொடர போதிய முகாந்திரம் உள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.