Published : 13 Nov 2022 04:20 AM
Last Updated : 13 Nov 2022 04:20 AM
காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் திறக்கப்படும் நீரின்அளவு விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதேபோல் புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 518 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி முன்னிலையில், ஏரியில் இருந்து முதல்கட்டமாக 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் பின்னர் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி இருந்ததால், நேற்று முன்தினம் வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 569 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று திறப்பின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்த நீர்மட்டம் 24 அடிக்கு தற்போது 20.28 அடி தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து விநாடிக்கு 1,950 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே தற்போது விநாடிக்கு 1,000 கனஅடி நீர்வெளியேற்றப்படுகிறது. இதனையொட்டி கரையோரத்தில் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏரியை நீர்வளஆதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 50 ஏரிகள் நிரம்பியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததாலும், தொடர் மழை பெய்து வருவதாலும் விநாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தவிர சென்னையின் குடிநீர்ஆதாரங்களாக திகழும் மற்ற ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
இதன்படி 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவும் 21.20 அடி உயரமும் கொண்ட புழல் ஏரியில் 2,790 மில்லியன் கனஅடி நீர் இருப்பும், 18.90 அடி நீர்மட்டமும் உள்ளது. விநாடிக்கு 710 கனஅடி நீர் வருகிறது. இதில், உபரிநீர் விநாடிக்கு 518 கனஅடியாக திறக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 159 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதேபோல் 18.86 அடி உயரமும் கொண்ட சோழவரம் ஏரியில்விநாடிக்கு 280 கனஅடி நீர் வருகிறது.
3,234 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 35 அடி உயரம் உள்ள பூண்டி ஏரியின் நீர்மட்டம் 26.88 அடியாக உள்ளது. விநாடிக்கு 450 கனஅடி நீர் வருகிறது. இதில், 43 கனஅடி நீர் பேபி கால்வாய் மூலம் திறந்து விடப்படுகிறது. இதேபோல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிக்கு வரும் விநாடிக்கு 145 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT