Published : 13 Nov 2022 04:25 AM
Last Updated : 13 Nov 2022 04:25 AM
தாம்பரம்: சோமங்கலம் அடையாறு கிளை ஆற்றில் வரும் வெள்ளத்தை மாற்றுப்பாதையில் வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
வடகிழக்கு பருவமழையின்போது முடிச்சூர், வரதராஜபுரம், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து விடும். இதைத்தடுக்க சோமங்கலம் அருகே, அடையாற்றின் கிளை கால்வாய் குறுக்கே, ரூ.4.50 கோடி செலவில், மேம்பாலம் மற்றும் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கப்பட்டது. இத்தடுப்பணை மூலம், 0.04 டி.எம்.சி., நீரைச் சேமித்து வைக்க முடியும். இந்த தண்ணீரை, விவசாய தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல் சோமங்கலம் கிளை கால்வாயில் இருந்து அடையாறு ஆற்றில் தண்ணீர் பெருமளவு செல்வதை தடுத்து வெளிவட்டச் சாலை வழியாக பாதாள மூடு கால்வாய் மூலம் கொண்டு செல்ல ரூ.34 கோடியில் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மழைநீர் வெளிவட்ட சாலையை கடக்கும் பகுதியில் சிறுபாலம் போதிய அளவில் இல்லாததால் மழைநீர் செல்ல வசதியாக 3 வழித்தடங்களில் மழைநீர் வெளியேற்றும் பணியை நீர்வள ஆதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து, நீர்வள ஆதாரத் துறையினர் கூறியதாவது: சோமங்கலம் அருகே, அடையாறு கிளை கால்வாயில் ரூ.4.50 கோடியில் தடுப்பணை கட்டுப்பட்டுள்ளது. சோமங்கலம் கிளையாற்றில் இருந்து வரதராஜபுரம் வழியாக ரூ.34 கோடியில் 2 கிலோ மீட்டர் தூரம் பாதாள மூடுகால்வாய் அமைத்து தாம்பரம் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் வெள்ளநீர் வெளியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மூடு கால்வாய் செல்லும் வழியில் இடையில் வரும் வெளிவட்டச் சாலை வழியாக அடையாற்று மழைநீர் செல்ல வேண்டும்.
ஆனால் இந்த வெளிவட்டச் சாலையில் ஏற்கெனவே உள்ள சிறுபாலம் போதிய அளவில் இல்லாததால் மழை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாற்றுப்பாதை மூலம் 3 இடங்களில் மழைநீரை வெளியேற்ற தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாதாள மூடு கால்வாய்மூலம் மழைநீரை வெளியேற்றுவதால் வரதராஜபுரம், முடிச்சூர் பகுதி குடியிருப்புகளில் வெள்ளை பாதிப்பு குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT