

சென்னை: அக்டோபர் 31 முதல் நவம்பர் 6வரையிலான ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2022’ முன்னிட்டு, இந்தியன் வங்கி மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து,பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, விநாடி-வினா போட்டி, ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டிகளை நடத்தின.
இப்போட்டிகளில் சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விநாடி-வினாபோட்டியை எக்ஸ் குவிஸ் ஐடி இணைந்து நடத்தியது. ‘ஊழலற்ற இந்தியாவே வளர்ந்த தேசம்’ எனும் தலைப்பிலான ஜூனியர் பிரிவுக்கான ஓவியப் போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களும், சீனியர் பிரிவுக்கான விநாடி-வினா போட்டியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் பங்கேற்றனர்.
‘ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம்’ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் ஏராளமான ஆசிரியர்களும் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் இ-சான்றிதழ் அனுப்பப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியின் பெருநிறுவன ஊடக அறையில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் இம்ரான் அமீன் சித்திக், அஸ்வனி குமார், தலைமை விஜிலென்ஸ் அதிகாரி சுனில் அரோரா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். தலைமை விஜிலென்ஸ் அதிகாரி சுனில் அரோரா பேசும்போது, ‘‘ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இப்போட்டிகளின் மூலமாகஇளைய மாணவ சமுதாயத்தினரின் உள்ளங்களில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊட்டப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமாகவும், பொதுப் பணத்தின் பாதுகாவலராகவும் விளங்கும் இந்தியன் வங்கி, தனது ஊழியர்களிடையே நன்னடத்தையை உறுதி செய்வதன் மூலம் பொதுநிதியைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் குடிமக்களிடையே ஊழலற்ற வளர்ந்த இந்தியா உருவாகுவதற்கான விழிப்புணர்வு செய்தியைப் பரப்பும் பொறுப்பை எப்போதும் ஏற்றுக்கொண்டுள்ளது’’ என்றார்.
நிகழ்ச்சியில், துணை பொதுமேலாளர் (விஜிலென்ஸ்) ஏ.பழனி, உதவிப் பொது மேலாளர் (விஜிலென்ஸ்) வி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். முதன்மை மேலாளர் (விஜிலென்ஸ்) கே.மணிகண்டன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.