Published : 13 Nov 2022 04:30 AM
Last Updated : 13 Nov 2022 04:30 AM

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி: அமித் ஷா நம்பிக்கை

தமிழக பாஜக அலுவலகத்துக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அருகில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசு செய்துள்ள நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கட்சியினர் கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த இந்தியா சிமென்ட்ஸ் 75-வது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அதைத் தொடர்ந்து தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்த அமித் ஷாவுக்கு கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அங்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன், எச்.ராஜா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, பாஜக நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றார். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிஎப்படி இருக்கிறது, மக்களின் எதிர்பார்ப்பு என்ன என நிர்வாகிகளிடம் அமித் ஷா கேட்டறிந்தார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணியை வலுப்படுத்துவது குறித்தும் திமுகவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ‘‘தமிழகத்துக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு செய்துள்ள நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும். நிர்வாகிகளும், தொண்டர்களும் கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்’’ என்று கூறியுள்ளார். அதன்பின், தனது பயணத்தை முடித்துக் கொண்டு அமித் ஷா டெல்லி திரும்பினார்.

ஆலோசனை கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் 2 நாட்கள் தமிழகம் வந்திருந்தது எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது.

ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தோ, கூட்டணி குறித்தோ பேசவில்லை. பேசுவதற்கான நேரமும் இது இல்லை. பாஜவினர் மீது எப்படிப்பட்ட பொய் வழக்குகள் போடப்படுகிறது என்பது குறித்து உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்திருக்கிறார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

சந்திக்க நேரமில்லை: சென்னை வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுவதற்காக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரம் ஒதுக்கித்தர கேட்டிருந்தனர். அமித் ஷாவுக்கு தொடர் அலுவல் பணி இருப்பதால், சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓபிஎஸ்ஸிடம் மரியாதை நிமித்தமாக அமித் ஷா நலம்விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x