

கடலூர்/விருத்தாசலம்: கடலூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவில் பெய்த பலத்த மழையால், வீராணம் ஏரி வடிகால் மதகில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் சிதம்பரம். காட்டுமன்னார்கோவில் வட்டப்பகுதியில் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற் றதால் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலைஆய்வு மையம் அறிவித்தது. அதோடு கடலூர் மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டது. இதையொட்டி கடந்த இரு தினங் களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கடந்த இரு நாட்களாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு மழை மேலும் வலுத்தது. இதனால் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி,சேத்தியாத்தோப்பு, பரங்கிப் பேட்டை மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ் வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
சிதம்பரம் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 307.9 மி.மீ. மழை பெய்துள்ளது. நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 13.3 செ.மீ. மழை பெய்துள்ளது. வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம் பலூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கருவாட்டு ஓடை,செங்கால் ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஏரியின் பாதுகாப்பை கருதி ஏரியின் வெள்ளியங்கால் வடிகால்மதகில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், பூதங்குடியில் உள்ள விஎன்எஸ்எஸ் வடிகால் மதகில் இருந்து விநா டிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 47.50 அடி கொள்ளளவு உள்ள வீராணம் ஏரியில் தற்போது 45.20 கன அடி தண்ணீர் உள்ளது.
ஏரியில்இருந்து சென்னைக்கு விநாடிக்கு 63 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.ஏரி மற்றும்மழை தண்ணீர் கான்சாகிப் வாய்க் காலில் அதிக அளவில் குமராட்சி அருகே பழைய கொள்ளிடத்தில் விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற் றில் கலக்கிறது.
ஏரியின் வடிகால் மதகான வெள்ளியங்கால் ஓடை பகுதியில் தண்ணீர் திறந்ததாலும், கன மழையாலும், திருநாரையூர், குமராட்சி, அதங்குடி கீழவன்னியூர், வீரநத்தம், சர்வராஜன்பேட்டை, அத்திப்பட்டு, ஆலம்பாடி மற்றும் சிதம்பரம் அருகே உள்ள சாலியத் தோப்பு, உசூப்பூர், கடவாச்சேரி, வல்லம்படுகை, ராதவிளாகம், பின்னத்தூர், தில்லைவிடங்கன், வடமூர், தெம்மூர், பரிவிளாகம் உட்பட 30 கிராமங்களில் 1,000 ஏக்கர் நெல் வயல்கள் மழை நீரில்மூழ்கின. இதனால் அப்பகுதி விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மழையால் சிதம்பரம், பரங்கிப் பேட்டை, காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
குமராட்சி அருகே உள்ள புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (38) என்பவர் நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்தார். மழையால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் 8 வீடுகளில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இரு கால்நடைகள் உயிரிழந் துள்ளன.
நேற்றைய மழையளவு: சிதம்பரம் - 307.9 மி. மீ, அண்ணாமலைநகர் - 275.8 மி.மீ, புவனகிரி - 206 மி.மீ, காட்டுமன்னார்கோவில் - 184 மி.மீ, பரங்கிப்பேட்டை - 181.2 மி.மீ, சேத்தியாத்தோப்பு - 159.4 மி.மீ, லால்பேட்டை - 27 மி.மீ, வேப்பூர் - 105 மி.மீ, விருத்தாசலம் - 103 மி.மீ, பண்ருட்டி - 96.6 மி.மீ, கடலூர் - 89.1 மி.மீ
விருத்தாசலத்தில் 1,350 ஏக்கர் பாதிப்பு: விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதியில் சம்பா சாகுபடி செய்திருக்கும் நிலையில், கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழையால் கவணை, சித்தேரி குப்பம் பகுதியில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்களில் உள்ள நெல் பயிர்களில் மழைநீர் புகுந்து உள்ளது.
மேலும் விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை சாலைப்பணிகளுக்காக பாலங்கள் அமைக்கும் பணி நடைபெறுவதால், தண்ணீர் வெளியேற வழியின்றி வயலூர், பவழங்குடி பகுதியில் 700 ஏக்கரும், பெரியவடபாடி, விஜயமாநகரம் பகுதியில் 150 ஏக்கரிலும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது மழைநீர் புகுந்து விவசாய நிலங்களை சீரழிந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் விவசாய விளைநிலங்கள் அருகே உள்ள வாய்க்கால்கள் மற்றும் மாரி ஓடையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.