

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பொங்கல் கரும்புகள் வேருடன் சாய்ந்தன. அதேபோல சம்பா நடவு நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பாச்சூர் அருகே அய்யம்பட்டியில் அடுத்த மாதம் அறுவடைக்குத் தயாராக 2 ஏக்கரில் இருந்த 10 ஆயிரம் பொங்கல் கரும்புகள் வேருடன் கீழே சாய்ந்தன. இதேபோல, சூரக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, அணைக்கரை போன்ற இடங்களிலும் பொங்கல் கரும்புகள் மழையால் கீழே சாய்ந்துள்ளன. இதையடுத்து, விவசாயிகள் சாய்ந்த பொங்கல் கரும்புகளை நிமிர்த்தி, ஒன்றாக கட்டி வருகின்றனர்.
சம்பா நெற்பயிர்: திருவையாறு பகுதியில் புனல்வாசலில் 250 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து, வயலில் தேங்கியுள்ள மழைநீரை வடியச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல, விளாங்குடி, வைத்தியநாதன்பேட்டை பகுதிகளில் விதைக்கப்பட்டுள்ள இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வடிகால்கள் முறையாக இல்லாததாலேயே வயலில் மழைநீர் தேங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளிலிருந்து 5,000 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதன் காரணமாக 150 விசைப் படகுகளும், 1,500 நாட்டுப் படகுகளும் கரைகளில் பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.