

திருச்சி: வேலூர், புழல் சிறைகளிலிருந்து விடுதலையான சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேர் திருச்சி சிறப்பு முகாமில் நேற்றிரவு அடைக்கப்பட்டனர். அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு கிடைக்கும்வரை அங்கு தங்க வைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்து, உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று விடுதலையானவர்களில் நளினி, ரவிச்சந்திரன் தவிர மற்ற 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் அந்த நாட்டுக்கு திரும்பும்வரை தற்காலிகமாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில், வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, திருச்சி ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் ஆகியோர் நேற்று மாலை சிறப்பு முகாமுக்குச் சென்று, 4 பேரையும் தங்க வைப்பதற்கான அறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து ஆட்சியர் மா.பிரதீப்குமார் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது: வெளிநாட்டினருக்கு இங்கு வீடு மற்றும் நிரந்தர தங்குமிடம் இருக்காது. எனவே, வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதாகி, தண்டனையிலிருந்து விடுதலை பெற்றவர்களை மீண்டும் அவர்களின் நாட்டுக்கு அனுப்பிவைக்கும்வரை திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைப்பது வழக்கம். அதன்படியே சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களை சிறப்பு முகாமில் ஏற்கெனவே உள்ள வெளிநாட்டவருடன் சேர்த்து தங்க வைக்காமல், பாதுகாப்பான இடத்தில் தனியாக தங்க வைக்கிறோம். இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவு கிடைக்க இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும். எனவே, அதுவரை மட்டுமே இவர்கள் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள் என்றார்.
இதற்கிடையே சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் சிறையிலிருந்தும், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் புழல் சிறையிலிருந்தும் பலத்த பாதுகாப்புடன் நேற்றிரவு 11.20 மணி அளவில் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர்.