Published : 13 Nov 2022 05:00 AM
Last Updated : 13 Nov 2022 05:00 AM
வாணியம்பாடி: பாலாறு பெரு வெள்ளத்தின் 119-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெருவெள்ளத்தில் உயிரிழந்த 200-க்கும் மேற்பட்டோருக்கும் பாலாறு உரிமைக்காக போராடியவர்களுக்கும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி கோலார் மாவட்டம் வழியாக சுமார் 90 கி.மீ பயணித்து ஆந்திராவில் சுமார் 30 கி.மீ பயணிக்கும் பாலாறு தமிழகத்தில் புல்லூரில் நுழைந்து அகண்ட பாலாறாக 222 கி.மீ தொலைவுக்கு ஓடி செங்கல்பட்டு மாவட்டம் வயலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. பாலாற்றில் எவ்வளவோ வெள்ளம் ஏற்பட்டாலும் 1903-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலா அணை உடைப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வாணியம்பாடி நகரம் நவம்பர் 12-ம் தேதி நள்ளிரவு கடுமை யாக பாதிக்கப்பட்டது.
இதில், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய துயர சம்பவமாக பாலாறு பெருவெள்ளம் கருதப்பட்டது. இந்த துயர நிகழ்வு குறித்த செய்திகள் லண்டன் மற்றும் அமெரிக்க நாட்டின் நாளிதழ்களில் வெளியானது. வாணியம்பாடி பெரு வெள்ளத்தை நினைவு கூறும் வகையில், வாணியம்பாடி பாலாற்றங்கரையில் வெள்ளத்தின் அளவை குறிக்கும் வகையில் வாரச்சந்தை மைதானம் அருகே நினைவுத்தூண் அமைத்துள்ளனர். இங்கு, ஆண்டு தோறும் நவம்பர் 12-ம் தேதி பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அதன்படி, வாணியம்பாடி பெரு வெள்ளத்தின் 119-வது ஆண்டு தினத்தையொட்டி நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரு வெள்ளத்தில் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் பாலாறு உரிமை போராளிகள் எம்.எம்.பஷீர் அஹ்மது, பொறி யாளர் நடராஜன், விவசாய சங்கத் தலைவர் சி.கே.தனபால், அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக்குழு மாநில செயலாளர் பாலாறு ஏ.சி.வெங்கடேசன் உள்ளிட்டோரின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், பாலாறு ஆர்வலர்கள் அம்பலூர் அசோகன், முல்லை மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT