

ரூபாய் நோட்டு பிரச்சினைக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையெனில் மக்கள் பொறுமை இழக்க வேண்டியிருக்கும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது முதல் ஒவ்வொரு நாளும் மத்திய அரசு வெளியிடும் அறிவிப்புகள் ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்வில் ஈட்டியைப் பாய்ச்சும் இரக்கமற்ற செயலாகவே உள்ளது.
ரூ.4 ஆயிரம் எடுப்பதற்கு ஒரு நாள் முழுவதையுமே செலவு செய்ய வேண்டும். அதனால் அன்றாடம் வேலைக்குச் செல்லும் மக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இனி 4 ஆயிரத்து 500-க்குப் பதிலாக ரூ.2 ஆயிரம் மட்டுமே வங்கிகளில் மாற்ற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களின் பசியோடும், வயிற்றோடும் விளையாட வேண்டாம். மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. இப்பிரச்சினைக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.