மழையால் தமிழகத்தின் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி
சென்னை: "தமிழகத்தைப் பொருத்தவரை மழையின் காரணமாக மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. அனைத்து பகுதிகளிலும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றன" என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
சென்னையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலகத்தில் உள்ள மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் இன்று (நவ.12) காலை அதிகாரிகளுடன் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மழையின் காரணமாக சென்னையில் எந்தவிதத்திலும் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை. அனைத்து மின் விநியோகர்களு்ககும், அனைத்து விதமான மின் இணைப்பைப் பெற்றவர்களுக்கும் சீரான மின் விநியோகம் சென்னையைப் பொருத்தவரை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் கடுமையான மழை பெய்தாலும்கூட, நாகப்பட்டினம் மாவட்டம் திருவெங்காடு பகுதியில் மட்டும், ஒரு மின்மாற்றி பழந்தடைந்தது. இதனால் அந்தப் பகுதியில் இரண்டு மணி நேரம் மின் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டன. இரவோடு இரவாக அது சரிசெய்யப்பட்டு, அந்தப் பகுதியிலும் இப்போது சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, தமிழகத்தைப் பொருத்தவரை மழையின் காரணமாக மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. அனைத்துப் பகுதிகளிலும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் தமிழக முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். குறிப்பாக இந்த மழை காரணமாக 11 ஆயிரம் பேர் மின் விநியோக சிறப்பு பணிகளுக்காக பணியமர்த்தப்பட்டனர். சென்னையைப் பொருத்தவரை, 1440 வரை பகல் நேரங்களிலும், 660 பேர் இரவிலும் மின் விநியோகப் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே தமிழகத்தைப் பொருத்தவரை மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில், சீரான மின் விநியோகம் வழங்கப்ப்டடு வருகிறது" என்று கூறினார்.
