

தமிழகம் முழுவதும் உள்ள நீதி மன்ற அறைகளுக்குள் கண் காணிப்பு கேமரா பொருத்துவதற்கு உரிய அரசு ஆணை பிறப்பித்து தேவையான நிதி 2 வாரங்களில் ஒதுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.காசிராமலிங்கம் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி நீதிமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் கண் காணிக்க வேண்டும். அப்போது தான் நீதித்துறை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதுடன், அவ்வப்போது ஏற்படும் தேவை யற்ற பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும்’’ என கோரி யிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசா ரணைக்கு வந்தபோது, ‘‘சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளை மற்றும் சென்னை மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளதால் இங்கு விரைவில் பணி தொடங்கவுள்ளது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விசாரணை நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்ற அறைகளின் உள்ளே மற்றும் வெளிப்புற பகுதி களில் பொருத்துவதற்கு எத்தனை கண்காணிப்பு கேமராக்கள் தேவைப்படும்? அதற்கு எவ்வளவு செலவாகும்? என்பது குறித்து உயர் நீதிமன்ற தலைமைப் பதி வாளர் தமிழக அரசுக்கு உரிய கருத் துருவை அனுப்பி வைக்க வேண் டும். அதற்கு அரசு அதிகாரிகளும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண் டும்” என தலைமை நீதிபதி அடங் கிய அமர்வு உத்தர விட்டிருந்தது.
அதன்படி இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நேற்று நடந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமார சுவாமி ஆஜராகி, ‘‘உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அனுப்பிய கருத்துருவை ஏற்று தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்ற அறைகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு உரிய அரசு ஆணை பிறப்பித்து, தேவையான நிதி 2 வாரங்களில் ஒதுக்கப்படும்’’ என்றார். அதையேற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 16-க்கு தள்ளிவைத்தனர்.