

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு, கரூர், தஞ்சை, மதுரை மாவட்டங்களில் நவம்பர் 19-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ''செலாவணி முறிச்சட்டத்தின் படி,அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கும் நவம்பர் 19-ம் தேதி அந்த 3 தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த கரூர், தஞ்சை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கரூர், தஞ்சை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து பணியாளர்கள் மற்றும் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளைச் சேர்ந்த, வெளிமாவட்டங்களில் பணயாற்றும் பணியாளர்களுக்கும் நவம்பர் 19-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படவேண்டும்.
மேலும், கரூர், தஞ்சை, மதுரை மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு சார்ந்த தொழிற்சாலைகள், அனைத்து பள்ளிகள்,கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் மூடப்பட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.