Published : 12 Nov 2022 06:28 AM
Last Updated : 12 Nov 2022 06:28 AM
திருநெல்வேலி: தமிழகத்தில் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளித்தால், இந்து சமய அறநிலைத்துறை உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த தயாராக இருக்கிறது என்று, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயிலில் டிவிஎஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் அம்மன் சந்நிதி மேற்கு பிரகாரம் கட்டுமான பணி, தெப்பக்குளம் புனரமைப்பு பணி மற்றும் கோயிலின் மேல்தளத்தில் ஓடுகள் அமைக்கும் பணி என, ரூ.4.30 கோடியில் நடைபெற உள்ள பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடப்பாண்டில் 30 கோயில்களில் ரூ.32 கோடியில் குடமுழுக்கு நடைபெறும் என அறிவித்திருந்தோம். அதில் 3 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் கோயில் புனரமைப்பு பணிக்காக ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு திருத்தேர் செய்ய ரூ. 34 லட்சம் ஒதுக்கி ஆணையிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1,500 கோயில்களில் ரூ.1,000 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 1,000 ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்த கோயில்களில் திருப்பணி செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ. 60 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் 100 ஆண்டுகளுக்குமேல் பழமையான 100 சிறு கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் 11 திருமேனி ( கோயில் சிலை) பாதுகாப்பு மையங்கள் முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டதால், பாதுகாப்புக்கு காவலர்களை நியமித்து திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த சிக்கல் தற்போது சரிசெய்யப்பட்டு 11 திருமேனி பாதுகாப்பு மையங்களிலும் காவலர்கள் நியமிப்பதற்கான கட்டணத்தை இந்து சமய அறநிலைத்துறை ஏற்றுள்ளது.
கோயில் வாகனங்கள் பழுது பார்க்க மற்றும் புதிய வாகனங்கள் வாங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை ரூ. 3,700 கோடி அளவில் கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளித்தால், உடனே கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை தயாராக உள்ளது. திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கோரிக்கையை ஏற்று நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களின் காலணி பாதுகாப்பகம் மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறைகள் ரூ. 62 லட்சத்தில் அமைக்கப்படும். மேலும் இங்கு கழிவறை அமைக்கும் பணியும் விரைவில் நடைபெறும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT