Last Updated : 24 Nov, 2016 02:18 PM

 

Published : 24 Nov 2016 02:18 PM
Last Updated : 24 Nov 2016 02:18 PM

நாட்டு மாடுகளை காப்பாற்ற முயற்சி எடுக்கப்படுமா?- மசினக்குடி கால்நடை வளர்ப்போர் எதிர்பார்ப்பு

மசினக்குடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் ஒருகாலத்தில் பிரசித்தி பெற்றிருந்த நாட்டு மாடுகள் வளர்ப்பு அடியோடு காலாவதியாகிவிட்டது. அது தற்போது மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளது. அதை ஊக்கப்படுத்தி, பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை வனச் சரணாலயம் (தற்போது புலிகள் காப்பகம்) அருகே அமைந்திருக்கும், இயற்கை வளம் மிகுந்த பிரதேசம் மசினக்குடி.

இதனைச் சுற்றியுள்ள வாழைத்தோட்டம், ஆனைகட்டி, மாவனல்லா, மாயாறு, பொக்காபுரம், சிங்காரா உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களிடம் கால்நடை வளர்ப்பு என்பது பிரதானத் தொழிலாக இருந்தது. குறிப்பாக, அவர்களிடம் நாட்டு மாடுகள் மிகுதியாக இருந்தன. மலைப் பிரதேசம் என்பதாலும், மேய்ச்சல் நிலங்கள் மிகுதியாக இருந்ததாலும் இத்தொழில் இங்கே சிறந்தது.

1,200 லிட்டர் பால்

காலையில் மாடுகளை மலைக் காடுகளுக்குள் அவிழ்த்து விட்டால், அவை தானாக மேய்ந்து விட்டு, மாலையில் வீடு திரும்பி விடும். அதற்கு பெரிய செலவு இருக்காது. இந்த தன்மைக்கும், இங்குள்ள சூழலுக்கும் நாட்டு மாடுகளே ஒத்துவந்தன. அவை ஒவ்வொன்றும் வருடத்துக்கு ஒருமுறை கன்று ஈன்றதுடன், 6 முதல் 7 மாதங்கள் வரை தினமும் 2 முதல் 5 லிட்டர் வரை தரமான பாலை, ஆண்டுக்கு சுமார் 1,200 லிட்டர் வரை அளித்தன.

இப்படி பல்லாயிரக்கணக்கான மாடுகள் கொடுத்த பால், உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ததுடன், மசினக்குடியில் ஏற்படுத்தப்பட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் தினமும் 5 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது.

நாட்டுமாடுகள் கறக்கும் பால் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியத்துக்கும் பயன்படும் என்பதால், மசினக்குடியிலிருந்து கேரளா பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த 1980-ம் ஆண்டுக்கு முன் அதிக அளவு பால் உற்பத்தி செய்யப்பட்டதால், காமதேனு, வாழைத்தோட்டம், மாயாறு, ஆனைகட்டி, பொக்காபுரம், மாவனல்லா என ஏராளமான பால் கூட்டுறவு சங்கங்கள் உருவாகின.

இவற்றில் கொள்முதல் செய்யப்படும் பாலை பதப்படுத்த, வாழைத்தோட்டம் கிராமத்தில் 16 ஏக்கர் பரப்பில் பால் குளிரூட்டும் நிலையம் தொடங்கப்பட்டது.

விருதுகள் பெற்ற சங்கம்

இந்த கூட்டுறவு சங்கங்கள் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் கீழ் இயங்கின. இதில், மசினக்குடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் தரமான, அதிகமான பால் உற்பத்திக்கு 3 முறை மாநில அளவில் முதலிடம் பிடித்து, பல்வேறு விருதுகள் பெற்றது.

இந்த நிலையில், அருகில் உள்ள முதுமலை வனச் சரணாலயத்தைச் சேர்ந்த வனத் துறையினரால், கால்நடை வளர்ப்பு பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியதாகப் புகார்கள் எழுந்தன.

“முதுமலை வனப் பகுதியில் உள்ள மான், யானை, புலி, கரடி உள்ளிட்ட வன விலங்குகள், இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளையே மையமிட்டு நகர்வதால், மக்கள் வளர்க்கும் கால்நடைகள் மூலம் வன விலங்குகளுக்கு நோய்கள் பரவி, இறப்பு நேரிடுகிறது. மாடு, ஆடுகளை புலி, சிறுத்தை போன்ற மிருகங்கள் அடித்துக் கொல்வதால், கால்நடை வளர்ப்போர் வன விலங்குகளுக்கு விஷம் வைத்து கொல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்ற கருத்துகள் மூலம், மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகள் வளர்க்க பல்வேறு கட்டுப்பாடுகளை வனத் துறை விதித்தனர்.

அதற்கு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரிடம் எதிர்ப்புகள் கிளம்பி, போராட்டங்களும் நடந்தன. ஒருகட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மாடுகள் வளர்க்க வனத் துறை கட்டணமுறை டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தியது.

ஜெர்சி மாடுகள்

மேலும், “நாட்டு மாடுகளால் பெரிய வருமானம் கிடையாது. பால் உற்பத்தியும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனவே, அதற்குப் பதிலாக ஜெர்சி இன மாடுகளை விவசாயிகள் வளர்க்கலாம்; அதன் மூலம் ஒரு நாளைக்கு 15 முதல் 30 லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்யலாம்” என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்து, திட்டங்களை வகுத்துத் கொடுத்துள்ளனர்.

அதன்படி, 5 நாட்டு மாடுகள் கொடுத்தால், ஒரு ஜெர்சி இன கலப்பின மாடு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஈர்க்கப்பட்டு, தங்களிடமிருந்த நாட்டு மாடுகளை அளித்துவிட்டு, கலப்பின மாடுகளைப் பெற்றுக் கொண்டனர்.

நாட்டு மாடுகள் அடிமாடுகளாக அனுப்பப்பட்ட நிலையில், புதிதாக வாங்கப்பட்ட ஜெர்சி மாடுகள் பால் கொடுத்ததா என்பது கேள்விக்குறியே.

அவை இங்குள்ள சீதோஷ்ண நிலையைத் தாங்கவில்லை. நிறைய மாடுகள் இறந்தன. இதற்காக போடப்பட்ட கொட்டகைகள், ஏற்படுத்தப்பட்ட பண்ணைகள் வீணாகின. இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இடையில் நிலவிய கடும் வறட்சியாலும், மாடு வளர்ப்பு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதற்கிடையே, கடந்த 2007-ம் ஆண்டு முதுமலை வனச் சரணாலயம் என்பது முதுமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அதனால் வனத் துறையின் கெடுபிடிகள் அதிகமாகின.

“மசினக்குடியை புலிகள் வசிக்கும் பகுதியாக அறிவித்தால், எல்லோரும் தொழிலை விடவேண்டியிருக்கும். ஊரைவிட்டே வெளியேற வேண்டி வரும்” என்றெல்லாம் கூறி, பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கிடையில், ஒருகட்டத்தில் நாட்டு மாடுகள் பெருமளவு அழிந்து, பால் உற்பத்தி நின்றுபோனது.

இதனால் மசினக்குடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு பால் வரத்து மிகவும் குறைந்தது. சுற்றுவட்டாரத்தில் இருந்த காமதேனு, ஆனைகட்டி, வாழைத்தோட்டம், மாவனல்லா-பொக்காபுரம் ஆகிய கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டன. பால் குளிரூட்டும் நிலையமும் மூடப்பட்டது.

மீண்டும் பால் கொள்முதல்

இந்த சூழ்நிலையில், கடந்த 2002 முதல் 2004 வரை மசினக்குடி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு பால் கொள்முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டு, அது பெயரளவில் இயங்கியது. அதற்குப் பிறகு படிப்படியாக மக்கள் பழையபடி நாட்டு மாடு வளர்ப்புக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக பால் உற்பத்தி தொடங்கி, தற்போது தினமும் 2 ஆயிரம் லிட்டர் வரை வரத் தொடங்கியுள்ளது.

எனவே, கெடுபிடிகளைத் தளர்த்தி, பால் உற்பத்தியில் மசினக்குடியை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல அரசு அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வனத் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்…

இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பிருகிருதி இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவரும், கால்நடை மருத்துவருமான டாக்டர் சுகுமாரன் கூறியதாவது:

1985 முதல் 2002-ம் ஆண்டு வரை நீலகிரி மாவட்டப் பகுதிகளில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்தேன். அதற்குப் பிறகு இயற்கை, வன விலங்குகள் பாதுகாப்பு, கால்நடைகளின் தேவையும், அவற்றின் பாதுகாப்பும் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். நான் அரசு கால்நடை மருத்துவராக பணிபுரிந்த காலத்தில் மிக அதிகமாக மசினக்குடி, கூடலூர் பகுதிகளிலேயே பணியாற்றியுள்ளேன்.

1985-86-ம் ஆண்டுகளில் மசினக்குடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் தினமும் 4,900 முதல் 5 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டில்கூட 3,400 லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யப்பட்டது.

ஜெர்சி இன மாடுகள், மேய்ச்சல் நிலங்கள் குறைந்தது, நாட்டு மாடுகளை அடிமாடாக அனுப்பியது ஆகியவை பால் உற்பத்தி குறைய காரணமாகும்.

1980-ம் ஆண்டுகளில் மசினக்குடி பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுமாடுகள் இருந்தன. 2006-07-ல் அவற்றின் எண்ணிக்கை 200-ஆக குறைந்தது. பின்னர் அது படிப்படியாக உயர்ந்து, தற்போது 2 ஆயிரம் மாடுகளாகியுள்ளது.

கலப்பின மாடுபோல அல்லாமல், தன் வாழ்நாளில் 20 முதல் 25 கன்றுகள் வரை ஈனக்கூடியவை நாட்டு மாடுகள். மலைக் காடுகளில் மட்டும் மேய்ச்சல் செய்வதால், அதன் பால் மருத்துவக் குணத்துடன், சத்து மிகுந்ததாக உள்ளது. “இந்த மாடுகளை புலி உள்ளிட்ட விலங்குகள் கொன்று விடுகின்றன. அதனால் வன விலங்குகளை மக்கள் கொன்று விடுகிறார்கள்” என்ற கருத்து இதற்குப் பொருந்தாது. அடிக்கடி கன்று ஈன்று, பட்டி பெருகும் நிலையில், கால்நடை வளர்ப்போர், வன விலங்குகளால் ஒன்றிரண்டு கால்நடைகள் கொல்லப்படுவதை பெரிதுபடுத்துவதில்லை. ஆனால், வனத் துறையினர்தான் இதை பெரிதுபடுத்துகின்றனர்.

நாட்டு மாடு வளர்ப்பை வனத் துறையினர் ஊக்குவிப்பதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, நாட்டு மாடுகள் வளர்ப்பில் அக்கறை செலுத்துமாறு வனத் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும். வன விலங்குகளால் பாதிக்கப்படும் கால்நடை வளர்ப்போருக்கு உடனடியாக நிவாரணம் அளித்து, மனித- விலங்கு மோதலைத் தடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x