

மதுரை: தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் பாதுகாப்புக்காக போலீஸாரை நிறுத்தலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த விக்டோரியா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்: "மதுரையில் சில நாட்களுககு முன்பு அரசு மீனாட்சி மகளிர் கலைக் கல்லூரி முன்பு மாணவி ஒருவரின் தந்தையை ஒரு நபர் கடுமையாக தாக்கினர். இதை பார்த்து மாணவிகள் பயந்து கல்லூரிக்குள் ஓடினர். மதுரையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியிலும் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அத்துமீறி நுழைந்து மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றனர்.
இவ்விரு சமபவங்கள் தொடர்பான வீடியோக்கள் மூக வலை தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களால் மகளிர் கல்லூரிகளில் பயிலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்கள் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டம் 8 மாநிலங்களில் அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் கல்லூரி, பள்ளிகளில் மாணவிகள் பாதுகாப்புக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. எனவே, தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாசலில் மாணவிகள் பாதுகாப்பு பணிக்கு போலீஸாரை நியமிக்க உத்தரவிட வேண்டும்." இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "மாணவிகள் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. மாணவிகள் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிற பாதுகாப்பு பணியின் போது 10 அடிக்கு ஒரு காவலர் நிறுத்தப்படுவது போல், மகளிர் கல்லூரிகளில் மாணவிகள் பாதுகாப்புக்கும் காவலர்களை நிறுத்தலாம்" என்றனர்.
வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "மதுரையில் நடைபெற்ற 2 சம்பவங்கள் வேறு வேறு நாட்களில், நிகழ்ந்தவை. இவ்விரு சம்பவம் தொடர்பாக போலீஸார் 15-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட கல்லூரிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டதுடன், விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.