

சென்னை: வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கும்படி தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வீர, தீர செயல்களுக்கான, ‘அண்ணா பதக்கம்’ ஆண்டுதோறும் முதல்வரால், குடியரசு தினத்தன்று வழங்கப்படுகிறது. இதில் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், தகுதியுரை ஆகியவை அடங்கும் வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர்.
பொதுமக்களில் மூவருக்கும், சீருடை பணியாளர் உட்பட அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.
இந்த 2023-ம் ஆண்டு வழங்கப்பட உள்ள வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்துக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீரச்செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ டிச.15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு முதல்வரால், அடுத்தாண்டு ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.