தமிழகத்துக்கு இரு மொழிக் கொள்கையே போதுமானது: அமைச்சர் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன், துறை செயலர் தா.கார்த்திகேயன், மத்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் டி.ராமசாமி, அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பதிவாளர் ஜி.ரவிகுமார் உள்ளிட்டோர்.  படம்: பு.க.பிரவீன்
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன், துறை செயலர் தா.கார்த்திகேயன், மத்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் டி.ராமசாமி, அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பதிவாளர் ஜி.ரவிகுமார் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்துக்கு இரு மொழிக் கொள்கையே போதுமானது என்று அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார். அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக் கலை மற்றும் திட்டமிடுதல் கல்லூரி, கோவை மண்டல வளாகம் ஆகியவற்றில் படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் க.பொன்முடி தலைமை வகித்தார். இதில், 2020-21, 2021-22-ம் கல்வியாண்டுகளில் தேர்ச்சி பெற்ற 10,164 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சில மாணவர்களுக்கு பட்டங்கள், சான்றிதழ்களை வழங்கி அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

வெளிநாடுகளில் பணிபுரிய ஆங்கிலம் தேவைப்படுகிறது. எனவேதான், இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்தியை படிப்பதால் எந்தப் பலனும் இல்லை. அதேவேளையில், சுய விருப்பத்தில் இந்தி, கன்னடம் என எந்த மொழியையும், யாரும் படிக்கலாம். எனினும், மொழித் திணிப்பை ஏற்க முடியாது. தமிழகம் இரு மொழிக் கொள்கையை என்றும் விட்டுத்தராது. மத்திய அரசு சம்ஸ்கிருதம் மற்றும் இந்தியை வளர்க்க இந்த ஆண்டில் மட்டும் ரூ.643 கோடி செலவு செய்துள்ளது. ஆனால், தமிழுக்கு ரூ.23 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் தரவேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதால், அரசுப் பள்ளிகளில் தற்போது இடம் கிடைப்பதே சவாலாக உள்ளது. வரும் ஆண்டுகளில் உயர்கல்வித் தரத்தில் தமிழகம் சிறந்த மாநிலம் என்ற நிலையை அடையும். அதற்கு, மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன முன்னாள் செயலர் டி.ராமசாமி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் குழும தலைமை இயக்குநர் என்.கலைச்செல்வி, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன், அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பதிவாளர் ஜி.ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in