உளவு அமைப்புகளின் அறிவுறுத்தல் காரணமாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

உளவு அமைப்புகளின் அறிவுறுத்தல் காரணமாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: கரூரில் மின்துறை நிகழ்ச்சி, திண்டுக்கல்லில் பிரதமர் மோடியுடன் காந்திகிராம பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள நிலையில், உளவு அமைப்புகளின் அறிவுறுத்தல் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.

இதுதவிர, கரூரில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை முதல்வர் வழங்குகிறார். இதற்காக நேற்று காலை அவர் கோவை புறப்பட்டுச் சென்றார். அவர், இன்று கரூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, மதுரை சென்று பிரதமர் மோடியை வரவேற்று, அதன் பிறகு, திண்டுக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்நிலையில், அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு பாதுகாப்பு அதிகரிக்க சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், கரூர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, முஸ்லிம் மற்றும் இந்து அடிப்படைவாதிகள் மற்றும் அதிருப்தியாளர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது. இதுதவிர, முதல்வர் ஸ்டாலினுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவு அமைப்புகளிடம் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளன. எனவே சட்டம் ஒழுங்கை கவனத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனவே, தங்குமிடம், செல்லும் வழிகள், பங்கு பெறும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நாசவேலைக்கு எதிரான சோதனைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். மேற்படி தலைவர்களுக்கு வழங்கப்பட உள்ள பூங்கொத்து, மாலை உள்ளிட்ட பொருட்களை கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வரும் வழிகள் அனைத்தும் கடுமையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூங்கொத்து, மாலை உள்ளிட்ட பொருட்களை கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in